Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

 1. செப்டம்பர் 6-ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

  பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 2. நியூசிலாந்தில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்தாரியான இலங்கை இளைஞரின் பின்னணி என்ன?

  நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் ஆறு பேரை கத்தியால் குத்திக் கொன்ற பிறகு காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த முகம்மது சம்சுதீன் அஹமட்.

  2016 முதல் தனதுகொள்கைகள் காரணமாக, நியூசிலாந்து காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தார் அவர். 2011இல் மாணவர் விசா மூலம் நியூசிலாந்து சென்ற அவர், பின்னர் சட்டப்பூர்வமான அகதியாக வாழ்ந்தார்.

  தீவிரவாத நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பில் இவர் இருந்ததால், நியூசிலாந்து பாதுகாப்பு முகமைகளுக்கு இவர் ஏற்கெனவே அறியபட்டவராக இருந்தார்.

  24 மணி நேரமும் இவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார். அவரது பிறப்பு, வளர்ப்பு, குணாதிசயங்கள் குறித்து அவரது தாய் பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தார். அதன் விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

  Video content

  Video caption: நியூசிலாந்து தாக்குதல்தாரியை மூளைச்சலவை செய்தார்களா - தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி
 3. வந்துகொண்டிருக்கும் செய்திகபில் தேவ் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா

  CRICKET
  Image caption: ஜஸ்பிரித் பும்ரா

  25 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய கபில்தேவ் சாதனையை தனது 24வது போட்டியில் 100வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.

  இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றபோது, கபில் தேவின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடித்துள்ளார்.

 4. உத்தராகண்டில் செப்டம்பர் 14வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

  கொரோனா

  உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 14ஆம் தேதிவரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலையின் வேகம் குறையாததால் அங்கு ஏற்கெனவே அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  அங்கு, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100 சதவீதம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. வாரத்தின் ஆறு நாட்களுக்கு காலை 8 முதல் இரவு 9 மணிவரை தொழில்கள் இயங்கலாம்.

  செயற்கை நீர் வீழ்ச்சி, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

  வெளி மாநிலங்களில் இருந்து உத்தராகண்டுக்கு வருபவராக இருந்தால், அவர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

  அது இல்லையென்றால் 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழை அவர்கள் வைத்திருக்க வேண்டும்.

 5. தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் தப்ப முயன்ற இலங்கை பெண் கைது

  பிரபுராவ்ஆனந்தன்:

  இலங்கை
  Image caption: கஸ்தூரி

  தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

  வெளிநாடு தப்பிச் செல்ல அவர் தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

  இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் இவருடைய மகள் கஸ்தூரி (19). இறுதி கட்ட போரின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்து இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கஸ்தூரி 2018ஆம் ஆண்டு விமான மூலம் சென்னை வந்துள்ளார்.

  விசா முடிந்த பின்னும் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில்; சட்ட விரோதாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

  இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவலை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் இலங்கைக்கு திரும்பிச் செல்ல இன்று அதிகாலையில் அவர் தனுஷ்கோடி வந்தார். அங்குள்ள நாட்டுப்படகு மூலம் கஸ்தூரி சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.

  அப்போது தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல் படை ரோந்து படகு வந்ததையறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

  இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழக கடலோரா பாதுகாப்பு குழும ராமேஸ்வரம் ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான போலீசார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனர்.

  கஸ்தூரியிடம் மெரைன் போலீசார் முதல் கட்ட விசாரணை செய்த பிறகு அவரை ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  சமீப காலமாக இலங்கை மக்கள் சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகம் வந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக தப்பி செல்கின்றனர். எனவே பிடிபட்ட கஸ்தூரி வெளிநாடு செல்லவதற்காக தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோமாக நாட்டுபடகில் அழைத்து செல்ல அவருக்கு உதவிய ஏஜென்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  இந்த நிலையில், ராமேஸ்வரம் மெரைன் போலீசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்தனர். காவல்துறை விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 6. தாலிபன் வசமானதா ஆப்கன் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு?

  ஆப்கானிஸ்தான்
  Image caption: பஞ்ஷீர் பள்ளத்தாக்கு பகுதியில் தாலிபன்களை எதிர்க்கும் கிளர்ச்சிக்குழுவினர்

  ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கின் முழு கட்டுப்பாடும் எங்கள் வசம் வந்து விட்டது என்று தாலிபன் அறிவித்துள்ளது.

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடக்கே உள்ள எல்லைக்கு அருகே அமைந்துள்ளது பஞ்ஷீர் பள்ளத்தாக்கு. தாலிபன் ஆளுகைக்கு எதிரான நடவடிக்கையில் 20 வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலைப்பாட்டை அங்குள்ள ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (என்ஆப்எஃப்) என்ற குழு தற்போதும் எடுத்துள்ளது.

  ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆளுகைக்கு கட்டுப்படாத ஒரே பகுதியாக விளங்கி வரும் இந்த இடத்தில் தாலிபன்கள் ஆயுத போராளிகளுக்கும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

  இந்த நிலைியல், பஞ்ஷீரின் முழு கட்டுப்பாடும் தங்கள் வசம் வந்து விட்டதாக தாலிபன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தானின் முழுமையான ஆளுகை தாலிபன்வசம் வந்து விட்டது என்று அவர் கூறியுள்ளார்.

  ஆனால், இதை ஏற்க என்ஆர்எஃப் குழு மறுத்து விட்டது. மேலும், தாலிபன்களுக்கு எதிராகப் போராடி வரும் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹமத் மசூத், தாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியிருக்கிறார்.

  மத குருக்கள் முன்வைத்த யோசனையின் அடிப்படையில், தாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், தாக்குதலை தாலிபன்கள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

  Video content

  Video caption: ஆப்கானிஸ்தான்: பஞ்ஷீர் மாகாணம் தாலிபன் வசமானதா? தேசிய எதிர்ப்பு முன்னணி சொல்வதென்ன?
 7. கினியில் அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் - அமெரிக்கா, ஐ.நா கண்டனம்

  ராணுவம்
  Image caption: கினி நாட்டு அதிபர் வீட்டை முற்றுகையிட்டுள்ள ராணுவத்தினர்

  மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கினி (Guinea - உள்ளூர் உச்சரிப்பில் 'கினி' என அழைக்கப்படுகிறது) நாட்டின் அதிபர் ஆல்ஃபா காண்டேவுக்கு என்ன ஆனது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒரு உறுதிப்படுத்தப்படாத காணொளியில், அதிபரை ராணுவத்தினர் சூழ்ந்திருப்பது போலக் காட்டுகிறது.

  ராணுவத்தினர் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, அரசைக் கலைத்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

  கினி தலைநகர் கொனாக்ரியில், அதிபர் மாளிகைக்கு அருகில் சில மணி நேரம் கனரக துப்பாக்கிகள் வெடிக்கும் சத்ததம் கேட்டதைத் தொடர்ந்து இப்படி கூறப்பட்டிருக்கிறது.

  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம், ராணுவத்தின் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை கண்டித்துள்ளன. மேலும் கினி அதிபரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 8. முன்னாள் ஆளுநர் அஜிஸ் குரேஷி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்த உ.பி அரசு

  உத்தர பிரதேசம் யோகி அரசு
  Image caption: அஜிஸ் குரேஷி, உத்தர பிரதேச முன்னாள் ஆளுநர்

  உத்தர பிரதேச முன்னாள் ஆளுநர் அஜிஸ் குரேஷி, மாநிலத்தில் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை இழிவான வகையில் பேசியதாகக் கூறி அவர் மீது தேச துரோக வழக்கை தொடர்ந்துள்ளது அந்த மாநில காவல்துறை.

  இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, "அஜிஸ் குரேஷி மீது பாஜக தலைவர் ஆகாஷ் குமார் சக்சேனா அளித்த புகாரின்பேரில் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது."

  ஆகாஷ் குமார் தமது புகாரில், "சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆசம் கானையும் அவரது மனைவி தஜின் ஃபாத்திமாவையும் சந்தித்த அஜிஸ் குரேஷி பின்னர் ஊடகங்களிடம் பேசும்போது, ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை ரத்தத்தை உறிஞ்சும் அரக்க அரசு என்று கூறியிருந்தார். அஜிஸ் குரேஷியின் இந்த கருத்து இரு பிரிவு சமூகங்களிடையே அமைதியற்ற நிலையை ஏற்படுத்தும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

  இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அஜிஸ் குரேஷி அளித்த பேட்டியில், "எனது கருத்துகளை தவறாக புரிந்து கொண்டு அரசியல் ரீதியாக என்னை களங்கப்படுத்தவும் மக்களை தவறாக வழிநடத்தவும் இந்த புகாரை பாஜகவினர் பயன்படுத்துகிறார்கள்," என்று கூறினார்.

  "இப்போது நடப்பது போன்ற கொடூரம், முன்பு எப்போதும் நடந்ததில்லை," என்றுதான் தாம் பேசியதாகவும் எவரையும் குறிப்பிட்டு தாம் அதை தெரிவிக்கவில்லை என்றும் அஜிஸ் குரேஷி தெரிவித்துள்ளார்.

  81 வயதாகும் காங்கிரஸ் மூத்த தலைவரான அஜிஸ் குரேஷி ஜோஷி, மிசோரம் மாநில ஆளுநராக 2014 முதல் 2015ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார். 2014இல் சுமார் ஒரு மாதம் அவர் உத்தர பிரதேச மாநில ஆளுநராகவும் இருந்திருக்கிறார்.

 9. புதரில் காணாமல் போன 3 வயது சிறுவன் நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்பு

  ஆஸ்திரேலிய சிறுவன்

  ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பகுதியில் உள்ள முட்புதரில் காணாமல் போன 3 வயது சிறுவன், நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

  அந்தோணி "ஏஜே" எல்ஃபாலக் என்ற அச்சிறுவனை, காவல்துறையினர் காஹெலிகாப்டர் தேடுதல் வேட்டையின்போது கண்டுபிடித்தனர்.

  அப்போது நியூ செளத் வேல்ஸ் கிராமப்புற பகுதியில் உள்ள தமது குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் இருந்த சிற்றோடையில் அந்த சிறுவன் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.

  ஆட்டிசம் குறைபாட்டுடன் கூடிய அந்த சிறுவனை கடைசியாக அவரது உறவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் வைத்து பார்த்துள்ளனர்.

  அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் அஞ்சினர். இந்த நிலையில்தான், மீட்புப் படையினர் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள புட்டி என்ற இடத்தில் உள்ள சிற்றோடை பகுதியில் சிறுவனை கண்டனர்.

  அந்த சிற்றோடை, சிறுவனின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. இது தொடர்பாக நியூ செளத் வேல்ஸ் காவல்துறையினர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில், "எங்களுக்கு பையன் கிடைத்துவிட்டான்" என மீட்புக்குழுவினர் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.

  மீட்கப்பட்டபோது, சிறுவனின் கால்களில் லேசான சிராய்ப்பும் காயங்களும் இருந்துள்ளன. அவரது ஆடை ஈரமாக இருந்தது. ஆனால், சிறுவன் ஆரோக்கித்துடன் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  100க்கும் அதிகமான மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் அந்த சிறுவனை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முட்புதரில் ஒவ்வொரு இடமாக தேடிய முயற்சின் விளைவாக, அவர் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்டார்.

  அந்த சிறுவனை முட்புதர் பகுதியில் சிற்றெறுப்புகள் கடித்துள்ளதில் அவர் அழுது கொண்டே மயங்கியிருக்கிறார். மகனை தேடும் முயற்சியில் எனது கால்கள், இடுப்புப் பகுதி, கணுக்கால் என பல இடங்களில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. நான்கு நாட்களாக உரக்கமின்றி தேடுதலை தொடர்ந்தோம்.

  இப்போது எங்களுடை மகன் கிடைத்து விட்டான் என்றார் ஆன்டனி எல்ஃபலாக். சிறுவன் மீட்கப்பட்ட தகவலை அறிந்ததும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், சிறுவன் பாதுகாப்பாக இருப்பதை அறிந்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

  View more on twitter
 10. தமிழக வீரர்களுக்கு சர்வதே நிபுணர்கள் மூலம் பயிற்சி: வீரர் மாரியப்பனின் கோரிக்கையை பரிசீலிக்கும் தமிழக அரசு

  மாரியப்பன்
  Image caption: மாரியப்பன், டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்

  தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்க பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் விடுத்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

  டோக்யோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான மாரியப்பன், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர் மெய்யநாதனை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெய்யநாதன், "தமிழக வீரர்களுக்கு சர்வதேச பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி வழங்குமாறு மாரியப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அவரது கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்," என்று கூறினார்.

 11. பெரியார் பிறந்தநாள் இனி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் - தமிழக முதல்வர் அறிவிப்பு

  ஆ. விஜயானந்த்

  பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி, சமூகநீதி இனி நாளாக கொண்டாடப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், ``1967 ஆம் ஆண்டு தி.மு.க முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, `இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை' என்று அண்ணா அறிவித்தார். ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க, பெரியாரை போற்றும் விதமாக விதி எண் 110ன்கீழ் பேரவைத் தலைவரின் அனுமதியோடு சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதை எண்ணி மகிழ்கிறேன்.

  பெரியாரின் சுயமரியாதை சிந்தனையால் தமிழினம் சுயமரியாதையைப் பெற்றது. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இன்று இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம்" என்றார்.

  தொடர்ந்து பேசுகையில், ``நாடாளுமன்ற வாசலுக்கே போகாத அவரால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் முதலாகத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. சட்டமன்றத்துக்குள் வர ஆசைப்படாத அவரது சிந்தனை கொண்ட சட்டங்கள் பலவும் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தனதுசிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்ய வைக்கும் அபூர்வமான ஆற்றல் அவருக்கு இருந்தது. சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமூகநீதி, இன உரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை பெரியார் உருவாக்கினார். அதுதான் கடந்த நூற்றாண்டில் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது.

  இந்த உணர்வை விதைக்கும் அடையாளமாக பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் நாளை ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கொண்டாடுவது என தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. பெரியார் மறைந்தபோது, `பெரியார் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம்' என கருணாநிதி தெரிவித்தார்.எனவே, நாமும் தொடர்வோம்" என்றார்.

  View more on twitter
 12. நிபா வைரஸ்- தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

  சுகாதாரத்துறை

  கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாச பிரச்னை, மன நல பாதிப்பு ஆகியவை நிபா வைரஸுக்கான முக்கிய அறிகுறி களாக கூறப்பட்டுள்ளன. அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பாதித்த நபருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு 21 நாட்கள் தனிமை அவசியம் என வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

  கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்ட எல்லைப் பகுதிகளில் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  அறிகுறி உள்ள நபர்களின் ரத்தம், தொண்டை சளி, சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து மட்டுமே நிபா வைரஸ் அறிகுறி நோயாளிகளை கையாள வேண்டும் எனவும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் பொதுவான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் சுகாதார பணியாளர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது

 13. புதுக்கோட்டையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

  பிரபுராவ் ஆனந்தன்

  புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி அரசு பள்ளியில் 2 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  பரிசோதனை முடிவு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளர்களிடம் பேசினார். முள்ளங்குறிச்சி அரசு பள்ளியில் 2 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

  பரிசோதனை முடிவு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

  மேலும், மாவட்டத்தில் படிக்கும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் தமிழக அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது அதனை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார் கவிதா ராமு.

 14. கோவை பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா - பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை

  மு. ஹரிஹரன்

  கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அந்த பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா கண்டறியப்பட்ட மாணவர்கள் மூன்று பேர் சிகிச்சைக்காக ஈ எஸ் ஜ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்ட அன்று 33 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

 15. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை

  இந்தியா கொரோனா

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,948 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 219 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

  இதில் கேரள மாநிலத்தில் மட்டும் 74 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதேவேளை, இந்தியாவில் 43 ஆயிரத்து 903 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் மட்டும் இதுவரை 4.40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக நாடு முழுவதும் இதுவரை 68 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டுள்ளன.

 16. தைவான் வான் பரப்பில் பறந்த சீன ராணுவ போர் விமானங்கள்

  தைவான்
  Image caption: தைவான் வான் பரப்புக்குள் பறந்த சீன ராணுவ ஜெட் விமானங்கள்

  சீன ராணுவ ஜெட் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததாக தைவான் தெரிவித்துள்ளது. போர் விமானங்கள் மற்றும் அணுஆயுத திறன் கொண்ட விமானங்கள் உட்பட மொத்தம் 19 விமானங்கள் தங்களுடைய வான் பாதுகாப்பு மண்டலத்தில் பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  அந்தத் தீவு அருகே சீனாவின் விமானப்படையின் தொடர்ச்சியான பணிகள் குறித்து தைவான் அரசு கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புகார் தெரிவித்து வருகிறது.

  தைவானை தமது ஆளுகையின் ஒரு அங்கமாக சீனா கோரி வந்தாலும், அதை ஏற்காமல் தைவான் அரசு சுயாதீனமாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் தைவான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பார்க்கிறது.

  சீன விமானப்படையின் ஞாயிற்றுக்கிழமை பணியில் நான்கு எச்-6 ரக போர் விமானங்கள் தமது வான் பரப்பில் பறந்ததாக தைவான் கூறியுள்ளது. அந்த விமானங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை தாங்கிச் செல்லும் திறன் வாய்ந்தவை என்றும் தைவான் தெரிவித்துள்ளது.

 17. பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு வரவேற்கிறோம்

  வணக்கம் நேயர்களே, பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் உங்களுக்கு வழங்குகிறோம்.

  தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.