Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. செப்டம்பர் 14ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

    பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

    இத்துடன் இந்த பக்கத்தில் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்திதமிழ்நாட்டில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி: பாமக அறிவிப்பு

    தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்றும் இதில் போட்டியிட விரும்பும் பாமகவினர் நாளையும் நாளை மறுதினமும் மனு வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு
  3. வந்துகொண்டிருக்கும் செய்திஇந்தியாவில் திருவிழாக்களை இலக்கு வைத்த தாக்குதல் சதி முறியடிப்பு: டெல்லி காவல்துறை

    டெல்லி காவல்துறை
    Image caption: டெல்லி காவல்துறை தனிப்பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேர்

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திருவிழா காலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இன்று காலையில் ராஜஸ்தானின் கோட்டாவில் ஒருவர், டெல்லியில் இரண்டு பேர், மற்றும் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப்பிரிவு உயரதிகாரி நீரஜ் தாக்குர் தெரிவித்தார்.

    பிடிபட்ட நபர்களில் ராஜஸ்தானில் கைதான நபர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மொஹம்மத் ஷேக் (47). டெல்லியைச் சேர்ந்த ஒசாமா (22), உத்தர பிரதேசத்தின் ரே பரேலியைச் சேர்ந்த மூல்சந்த் (47), பிரயாக்ராஜை சேர்ந்த ஜீஷான் கமர் (28), பக்ரைச்சை சேர்ந்த மொஹம்மத் அபு பாக்கர் (23), லக்னெளவை சேர்ந்த ஆமிர் ஜாவேத் (31) என தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இவர்கள் பிடிபட்ட இடங்களில் இருந்து இரண்டு கையெறி குண்டுகள், ஐஇடி வெடிகுண்டுகள், ஒரு கிலோ ஆர்டிஎக்ஸ், இத்தாலி ரக கைத்துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒசாமா, கமர் ஆகியோர் மஸ்கத்துக்குச் சென்று அங்கிருந்து பாகிஸ்தானுக்கு படகில் சென்றதாகவும் அங்கு அவர்கள் ஆயுத பயிற்சி பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது என்று நீரஜ் தாகுர் தெரிவித்தார்.

    இவர்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பயிற்சி வழங்கியிருக்கலாம் என்று டெல்லி காவல்துறை சந்தேகிக்கிறது. மத்திய உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டெல்லி தனிப்பிரிவு காவல்துறையினர் இந்த நபர்களை பிடிக்க ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநில காவல்துறையுடன் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நபர்கள் இந்தியாவில் திருவிழா காலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  4. தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிருபர்கள் பிபிசிக்கு அளித்த நேர்காணல்

    ஆப்கானிஸ்தான் தாலிபன்
    Image caption: ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்கள்

    கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இரண்டு செய்தியாளர்கள், பிபிசியுடனான நேர்காணலின்போது, தங்களுக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தனர்.

    டாக்கி தர்யாபி, நீமத் நக்தி ஆகிய அந்த இரு செய்தியாளர்களும் கடந்த வாரம் காபூலில் பெண்களின் ஆர்ப்பாட்டத்தைச் செய்தியாக்கியதற்காகவே தங்களை தாலிபன்கள் பிடித்துச் சென்று காவலில் வைத்து தாக்கியதாக தெரிவித்தனர்.

    'Etilaatroz' என்ற புலனாய்வு இதழுக்காக பணிபுரியும் இவர்களின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவர்களது உடல்களில் காயங்கள் இருந்தன.

    தாங்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு தாலிபன்கள் பலர் தங்களைக் கட்டைகளாலும் கிடைத்தவற்றைக் கொண்டும் அடித்துப் போட்டு, சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்ததாகவும் இருவரும் தெரிவித்தனர்.

    எந்தவொரு பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டாஸும் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தாலிபன் தலைவரை மேற்கோள் காட்டி ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.இது குறித்து மேலும் அறிய இங்கே சொடுக்கவும்.

  5. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் இரு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் அடுத்த மாத தொடக்கத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களவை இரண்டு இடங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோரை அறிவித்துள்ளது அக்கட்சித்தலைமை.

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்த கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    இதையடுத்து கடந்த மே 7-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழ்நாடுமத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ,மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் மற்றும் பேரவை தேர்தலில் சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சோமு ஆகியோர் போட்டியிடுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இருவரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது.

  6. இலங்கை பாராலிம்பிக் வீரர் அனீக் அஹமட் காலமானார்

    யூ.எல். மப்றூக், இலங்கை

    அனீக் அஹமட்
    Image caption: அனீக் அஹமட்

    புற்று நோய் காரணமாக தனது காலொன்றை இழந்த பின்னரும், விளையாட்டில் தேசிய ரீதியாக தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்த இலங்கை - கிழக்கு மாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்த அனீக் அஹமட் இன்று திங்கட்கிழமை காலமானார்.2019ஆம் ஆண்டு கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்ற தேசிய பராமெய் வல்லுனர்போட்டியில் கலந்து கொண்ட அனீக் அஹமட், அதில் 3 தங்க பதக்கங்களை வென்றிருந்தார். அவரின் அந்தச் சாதனை குறித்து அப்போது பிபிசி தமிழ் - கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.உதைப்பந்து விளையாடும் போது - காலில் ஏற்பட்ட உபாதை, பின்னர் புற்று நோயாக மாறியதில், 2018ஆம் ஆண்டு தனது இடது முழங்கால் வரை அனீக் இழந்தார்.இருந்த போதும் விளையாட்டின் மீது அவருக்கிருந்த ஈடுபாடு மற்றும் பேரார்வம் காரணமாக, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பரா மெய்வல்லுநர் வியைாட்டுப் போட்டியில் அனீக் கலந்து கொண்டு, மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டத்திலும், நீளம் பாய்தலிலும் அவருக்கு அந்தப் பதக்கங்கள் கிடைத்தன.

    புற்று நோயினால் அண்மைக்காலமாக கடுமையான வேதனையினை அனீக் எதிர் கொண்டு வந்ததாகவும், கடந்த ஜுன் மாதம் அவருக்கு சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் அவரின் இளைய சகோதர் பிபிசி தமிழிடம் கூறினார்.

    தனது 10 வயதில் தாயையும், 16 வயதில் தந்தையையும் இழந்த அனீக் அஹமட், இன்று தனது 21ஆவது வயதில் அவரின் வீட்டில் மரணமடைந்தார்.

    அனீக் அஹமட்
  7. நீட் விலக்கு விவகாரத்தில் எல்லோரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்: செ.கு. தமிழரசன்

    ஏ.எம். சுதாகர், சேலம்

    செ.கு. தமிழரசன்
    Image caption: இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசும் அக்கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன்

    நீட் விலக்கு விவகாரத்தில் எல்லோரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் வலியுறுத்தியுள்ளார்.

    சேலம் சீல்நாய்க்கன்பட்டியில் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம்:

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை போதிய அவகாசம் கொடுத்து அறிவித்து இருக்கலாம். 48 மணி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு பல இடையூறுகளை ஏற்படுத்தும். தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டும்.

    நீட் தேர்வு யார் கொண்டு வந்தது என சர்ச்சையில் ஈடுபட்டு வருகின்றனர் . மத்திய அரசிடம் தெரிவித்து நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு இப்போது வரவில்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. நீட் தேர்வால் அப்பாவி குழந்தைகள் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

    இந்தியா முழுவதும் ஒரே மாதிரி தேர்வு நடத்த வேண்டும் என்பது இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு. அப்போது யாரும் இதை எதிர்க்கவில்லை. இதன் பின்னர்தான் நாடாளுமன்றத்தில் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காவிரி பிரச்னைக்கு மாநிலம் முழுவதும் குரல் கொடுத்தது போல் நீட் தேர்வுக்கும் குரல் தர வேண்டும் என்றார் செ .கு. தமிழரசன்.

  8. புதுச்சேரி கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

    நடராஜன் சுந்தர், புதுச்சேரி

    விநாயகர் சதுர்த்தி

    புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.

    புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியிருந்தது.

    இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 5 அடி முதல் 25 அடி உயரத்திலான பிள்ளையார் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபட்டனர்.

    இந்நிலையில் புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபட்ட 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று பிற்பகல் புதுச்சேரி சாரம் அவ்வைத்திடலில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கடற்கரைக்கு எடுத்துச் சென்றனர்.

    அரசின் வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடந்தது. இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகள் புதுச்சேரி கடற்கரை சாலை பழைய துறைமுகம் அருகே உள்ள கடலில் கரைக்கப்பட்டன.

  9. வந்துகொண்டிருக்கும் செய்திகாபூலை விட்டு வெளியேறியபோது விமான நிலையத்தை சேதப்படுத்திய அமெரிக்கா: தாலிபன் குற்றச்சாட்டு

    காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோது அந்த வளாகத்தை அமெரிக்கா சேதப்படுத்தி விட்டதாக தாலிபன் குற்றம்சாட்டியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் தற்போது மனிதாபிமான நெருக்கடியில் இருப்பதால் அதற்கு உதவிடுமாறும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

  10. 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

    ராமதாஸ்
    Image caption: டாக்டர் எஸ். ராமதாஸ்

    இந்திய அரசியலமைப்பின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவித்து மொழிச்சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இந்தி திவஸ் நிகழ்வையொட்டி பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாய் மொழியுடன் மக்கள் இந்தி மொழியையும் சேர்த்துக் கற்க வேண்டும் என்றார்.

    இதற்கு எதிர்வினையாற்றியுள்ள டாக்டர் ராமதாஸ், "தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது.

    அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச்சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.

    "இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்று கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு... அவ்வாறு கூறக்கூடாது!"

    "இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயலாகும்!," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

  11. பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் - அதிர்ச்சி தரும் ஆய்வு

    தலித் படுகொலைகள்

    தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக 'எவிடென்ஸ்' என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,' என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர்.

    தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2020 வரையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுதொடர்பான தகவல் பெறப்பட்டிருக்கிறது. கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்தத் தகவல்களை எவிடென்ஸ் அமைப்பு திரட்டி வந்துள்ளது.

    `` தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களிலிருந்து எஸ்.சி, எஸ்.டி கொலைகள் குறித்த தகவல் பெறப்பட்டிருக்கிறது. தகவல் பெறப்பட்ட 33 மாவட்டங்களில் 300 எஸ்.சி, எஸ்.டி மக்கள் சாதிரீதியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் அளிக்காத 5 மாவட்டங்களையும் கணக்கிட்டு பார்த்தால் இந்த படுகொலை 340 முதல் 350 வரையில் நடந்திருக்கும் எனக் கணிக்க முடிகிறது," என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

    இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

  12. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரி வழக்கு

    கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நா. எழிலன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்த காலகட்டத்தில், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 42வது திருத்தத்தின் மூலம் கல்வி பொதுப் பட்டியலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

    இந்தத் திருத்தத்தை எதிர்த்து தி.மு.கவின் ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நா. எழிலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

    அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், கல்வியை பொதுப் பட்டியலுக்குக் கொண்டுசென்ற சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கக்கோரியும், கல்வி தொடர்பாக மாநில அரசு சட்டங்கள் இயற்ற முடியாத நிலை இருப்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

    பல்வேறு நாடுகளில் கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் பட்டியலில் இருப்பது குறித்தும் மாநில அரசுகளால் மட்டுமே அந்தந்தப் பிராந்தியங்களின் கல்வித் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியுமென்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அரசியல் சாஸனத்தில் அடிப்படைக் கட்டமைப்பில் இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவர முடியாது எனவும், அரசியலமைப்புச் சட்டக் குழுவில் கல்வியை பொதுப் பட்டியலில் வைக்கும் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதையும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

    இதனைக் கேட்ட நீதிபதிகள் தமிழ்நாடு அரசையும் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டதோடு, மத்திய அரசு இந்த விவகாரத்தில் எட்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை பத்து வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

    Ezhilan Naganathan
  13. மமதா பானர்ஜி மீது பாஜக புகார்

    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிபூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அந்த மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி, தம் மீதான 5 வழக்குகளை வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார் என்று பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

    ஏப்ரல், மே மாதங்களில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

    ஆனால் முதலமைச்சர் மமதா பானர்ஜி அவர் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.

    மமதா முதல்வர் பதவியில் நீடிப்பதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

    மமதா பானர்ஜி
  14. நீட் தேர்வு தற்கொலை: பள்ளியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவி கனிமொழி மரணம்

    நீட் தேர்வு சரியாக எழுதவில்லையோ என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    இவர் 12ஆம் வகுப்பில் 12ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றவர்.

    விரிவாகப் படிக்க: நீட் தேர்வு அச்சம்: பள்ளியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவி தற்கொலை

    neet suicide ariyalur kanimozhi
  15. நரேந்திர மோதி இந்தி தின வாழ்த்து

    இன்று இந்தி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்தை பகிர்ந்துள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோதி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்தி தின வாழ்த்துச் செய்தியில், "இந்தியை செழிப்பாக்குவதற்காக பல தரப்பு மக்களும் பங்காற்றினர். அது இந்தியை தொடர்ந்து வலிமையாக நிலைநாட்டுவதுடன், சர்வதேச அரங்கில் வலிமையான அடையாளத்தையும் தருகிறது, உங்கள் அனைவருக்கும் இந்த தின வாழ்த்துகள்," என்று நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    இந்திய உள் துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா தமது இந்தி தின வாழ்த்தில், “இந்தி தினமான இன்று, நாட்டு மக்கள் அனைவரும் அடிப்படை வேலைகளில் தங்கள் தாய் மொழியுடன் அலுவல் மொழிகளில் ஒன்றான இந்தியையும் படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழியை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் முன்னேற்றம் தாய்மொழி மற்றும் அலுவல் மொழியின் ஒருங்கிணைப்பில் அடங்கியுள்ளது,” என்று கூறியுள்ளார்.

    View more on twitter
  16. சென்னையில் நான்கு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மரபணு பகுப்பாய்வுக் கூடம் திறப்பு

    முரளிதரன் காசி விஸ்வநாதன்

    சென்னையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நான்கு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மரபணு பகுப்பாய்வு கூடத்தை (Whole Genome Sequencing) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

    உருமாறிய கொரோனா வைரஸ்களை கண்டறிய இந்த மரபணு பகுப்பாய்வகம் உதவும்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2.8.2021 அன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது “மரபணு பகுப்பாய்வு கூடம் (Whole Genome Sequencing) ஒன்று 4 கோடி ரூபாய் செலவில் சென்னையில் டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன்படி நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் திறந்து வைத்தார்.உருமாறிய கொரோனா வைரஸ்களை மரபணு பகுப்பாய்வகம் மூலமாக மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

    ஆகவே, தமிழகத்தில் பரவும் கொரோனா வைரஸ்களின் உருமாற்றத்தினை கண்டறிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இயங்கும் மரபணு பகுப்பாய்வகங்களுக்கு கொரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டு வந்தன.

    இதனால், முடிவுகளை அறிவதில் தாமதம் ஏற்பட்டது. இக்குறைகளை போக்கும் வகையில், பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வுக்கூடம் நிறுவப்பட்டுள்ளதால், உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதனடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா நோயின் தாக்கத்தினை பெருமளவு தடுத்திட இயலும் என அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.இத்தகைய மரபணு பகுப்பாய்வகம் ஒன்றை இந்தியாவில் ஒரு மாநில அரசு இதுவே முதல் முறையாகும்.

    coronavirus
  17. கோடநாடு வழக்கு: குற்றவாளியை நெருங்கிய காவல்துறை'- பெங்களூரு புகழேந்தி

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு' எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

    கோடநாடு வழக்கு: குற்றவாளியை நெருங்கிய காவல்துறை - அதிர்ச்சியைக் கிளப்பும் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி

    கோடநாடு வழக்கு
  18. யாருக்கு பூஸ்டர் டோஸ்? அறிவிப்பை எதிர்பார்த்து பிரிட்டன்

    வயதானவர்கள்
    Image caption: GETTY IMAGES

    பிரிட்டன், தன்நாட்டு மக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து கடந்த பல வாரங்களாக விவாதித்து வருகிறார்கள். கொரோனா குளிர்கால திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    யாருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க, பிரிட்டன் அரசு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழுவிடம் அறிவுரை வழங்குமாறு கேட்டிருந்தது.

    ஆனால் இதுவரை அக்குழுவினரிடம் இருந்து வர வேண்டிய பரிந்துரைகக்காக அரசு காத்திருக்கிறது. இரண்டாம் டோஸ் கொரோன தடுப்பூசி செலுத்தப்பட்டு குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்குப் பிறகு, ஒரு டோஸ் ஃபைசர் தடுப்பூசி செலுத்துவது தான் பூஸ்டர் டோஸ் என்றழைக்கப்படுகிறது.

  19. பொதுமக்களை கொன்ற தாலிபன்கள்

    ஆப்கானிஸ்தானில் இருக்கும் பஞ்ஷீர் மாகாணத்தில் குறைந்தபட்சம் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பிபிசிக்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

    ஒரு காணொளியில், பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் ராணுவ உடை அணிந்த ஒரு நபரை சுற்றி தாலிபன் போராளிகள் நிற்கிறார்கள்.

    ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. அவர் தரையில் விழுகிறார். கொல்லப்பட்டவர் ராணுவத்தைச் சேர்ந்தவரா என தெளிவாகத் தெரியவில்லை.

    அப்பகுதியில் ராணுவ உடை அணிவது சாதாரணமானது என்பது கவனிக்கத்தக்கது.

    அக்காணொளியில் அவருக்கு அருகில் நிற்பவர் ‘அவர் ஒரு பொதுஜனம்’ என்று கூறுகிறார். இப்படி ஆப்கானிஸ்தானில் குறைந்தபட்சம் 20 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

    அப்படி கொல்லப்பட்டவர்களில் அதில் அப்துல் சமி என்கிற வியாபாரியும் ஒருவர். “நான் ஒரு ஏழை வியாபாரி, எனக்கும் போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என அப்துல் சமி தாலிபன்களிடம் கூறியதாக உள்ளூரில் இருப்பவர்கள் பிபிசியிடம் கூறினர்.

    அவர் தாலிபன்களுக்கு எதிரணியில் இருப்பவர்களுக்கு சிம் கார்டுகளை விற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    சில நாட்களுக்குப் பிறகு அவரது சடலம், அவரது வீட்டருகில் வீசப்பட்டது. அவரது உடலில், அவரை துன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்ததாக அவர் உடலைப் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

    அப்துல் சமி
    Image caption: அப்துல் சமி
  20. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் சிறப்பு நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகச் செய்திகளுக்கு இந்தப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.