Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. வளரும் நாடுகளுக்கு கூடுதலாக 500 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பூசி மருந்து: ஜோ பைடன்

    கொரோனா தடுப்பூசி

    வளரும் நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனமான ஃபைசரின் கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    உலக மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட 11 பில்லியன் டோஸ்கள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில், இந்த எண்ணிக்கையில் 40 சதவீத அளவை எட்டுவதை குறைந்தபட்ச இலக்காக உலக சுகாதார அமைப்பு கொண்டுள்ளது.

    ஆனால், அப்போதும் இந்த இலக்கு நிறைவேறுமா என்பது சாத்தியமற்று உள்ளது. உலகின் செல்வந்த நாடுகள் பலவும் அவற்றின் மக்கள்தொகையில் பாதி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை போட்டு முடித்துள்ளன. குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் அவற்றின் மக்கள்தொகையில் வெறும் இரண்டு சதவீத அளவில்தான் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தரவு கூறுகிறது.

    வளரும் நாடுகளுக்கு ஏற்கெனவே 580 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. அதில் 140 மில்லியன் டோஸ்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளன என்கிறார் மக்கள்தொகை விவகாரங்களை கவனிக்கும் பிபிசி செய்தியாளர்

  2. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் வழங்கிய பிரிட்டன் - ஆனாலும் தொடரும் குழப்பம்

    கொரோனா
    Image caption: இந்தியாவில் விரிவான பயன்பாட்டில் உள்ளது கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது பிரிட்டன் அரசு. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்,

    ஆஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி மருந்துதான் கோவிஷீல்டு.

    இந்த தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் மறுத்த விவகாரம், இந்தியாவில் கொந்தளிப்பை உருவாக்கியது.

    இந்தியாவில் இதுவரை 721 மில்லியன் டோஸ்கள் அளவுக்கு கோவிஷீல்டு மருந்து பயனர்களுக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களுடைய நாட்டுக்குள் வரும் பயணிகளை 10 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு வரும் 4ஆம் தேதி முதல் உட்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் அரசு தெரிவித்தது.

    ஆனால், இந்த நடவடிக்கை பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் கோவிஷீல்டு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு கூறியது.

    இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருந்தார்.

    இந்த விவகாரத்தில் இந்தியாவை பாரபட்சமாக நடத்தும் போக்கு தொடர்ந்தால் அதேபோல இந்தியாவும் எதிர்வினையாற்ற நேரிடும் என்று இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளதாக பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

    இது தொடர்பாக சமீபத்தில் வெளியிட்ட விதியிலும் அந்நாட்டு அரசு திருத்தம் செய்தது. அதே சமயம், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்பதை பிரிட்டன் அரசு தெளிவுபடுத்தவில்லை.

  3. கொரோனாவால் இறப்பவர்களுக்கு மாநிலங்கள் மூலம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு: இந்திய அரசு

    கொரோனா மரணங்கள்

    இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக மாநில அரசுகள் சார்பில் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

    இதற்கு முன்பு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளுக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டாலும் இந்த தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா நிவாரணப்பணிகள் அல்லது முன்னேற்பாடு நடவடிக்கையின்போது யாராவது இறந்தாலும் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

    அவர்களுடைய மரணத்துக்கு காரணம் கொரோனா தான் என்பது இந்திய சுகாதார அமைச்சக வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்டிருந்தால் இந்த தொகையை இறந்தவர்களின் குடும்பங்கள் பெறலாம் எஎன்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

    இந்த காப்பீடு கோரல், சரிபார்ப்பு, தொகை வழங்கல் போன்ற நடவடிக்கைகளை எளிதான வகையிலும் விரைவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான கோரல்கள் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் குறைகள் ஏதேனும் இருந்தால், அதை மாவட்ட கூடுதல் ஆட்சியர், தலைமை மருத்துவ அதிகாரி, கூடுதல் மருத்துவ அதிகாரி, மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர், அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர் அடங்கிய மாவட்ட அளவிலான குழு கையாளும் என்று மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.

    மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சாதகமாக இழப்பீடு கோரல் முடிவை அந்த குழு வழங்காவிட்டால், அது ஏன் என்பதை எழுத்துபூர்வமாக அந்த குழு பதிவு செய்ய வேண்டும் என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது அப்போது முதல் இதுவரை நான்கரை லட்சத்துக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

  4. புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகிறார் செல்வகணபதி

    புதுச்சேரி
    Image caption: புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வேட்பாளர் செல்வகணபதி.

    புதுச்சேரியில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகவிருக்கிறார்.

    இவரை வேட்பாளராக பாஜக மேலிடம் சமீபத்தில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை செல்வகணபதி இன்று தாக்கல் செய்தார்.

    அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதியை பாஜக மேலிடம் நேற்று அறிவித்தது.

    இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், எதிர்கட்சிகள் சார்பில் யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாததால், பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகவுள்ளார்.

  5. புதுச்சேரியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு

    தேர்தல் ஆணையம்

    புதுச்சேரியில் வரும் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் தேர்தல் தேதி விவரங்களை புதுச்சேரி தேர்தல் ஆணையர்‌ ராய் பி. தாமஸ் வெளியிட்டார். அறிவித்தார்.

    அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும்.

    இரண்டாம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறும்.

    மூன்றாம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

    முதல்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம்கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 11ஆம் தேதி நிறைவடைகிறது.

    மூன்றாம் கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி நிறைவடைகிறது. மூன்றுகட்ட வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

    வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை. இதில் கடைசி ஒரு மணி நேரமாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அதில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 202 பேர் ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பெண்கள் என 117 பேர் திருநங்கைகள் உள்ளனர் என்று புதுச்சேரி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  6. புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

    நடராஜன் சுந்தர்

    புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.

    புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதியை பாஜக மேலிடம் நேற்று அறிவித்தது.

    இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாததால், பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

    pondicherry bjp
  7. சேகர் ரெட்டி டைரி: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்பட 12 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்

    ஆ. விஜயானந்த்

    தொழிலதிபர் சேகர் ரெட்டியின் டைரியில் இடம்பெற்றிருந்த பெயர்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட முன்னாள் அமைச்சர்கள் 12 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம், விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த சேகர் ரெட்டி, கடந்த 2011-16 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மணல் உள்பட பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் கொடிகட்டிப் பறந்தார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல அமைச்சர்களுடன் அவர் நெருக்கமாக இருந்ததாகவும் தகவல்வெளியானது.

    இந்நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டி வாங்கியதாகக் கூறப்பட்டது.

    இதையடுத்து, சேகர்ரெட்டியின் காட்பாடி இல்லம், சென்னை அலுவலகம் உள்பட அவரது நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பெட்டி பெட்டியாக 24 கோடி ரூபாய் அளவுக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்த விவகாரத்தில் சேகர்ரெட்டி, பிரேம்குமார், ஸ்ரீனிவாசலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய ஆறு பேர் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என சி.பி.ஐ கூறியதால், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    இந்தச் சூழலில் சேகர் ரெட்டியின் டைரியில் இடம் பெற்றிருந்த பெயர்கள் தொடர்பாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு சி.பி.ஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    இந்த 12 பேர் பட்டியலில் அ.தி.மு.கவில் அமைச்சராக இருந்து தற்போது தி.மு.கவில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    EPS OPS
  8. பிரிட்டன் உடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் - ஆர்வம் காட்டாத அமெரிக்கா

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரிட்டன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை வெள்ளை மாளிகையில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக சந்திக்கவுள்ள நிலையில்,பிரெஸ்க்சிட்-க்கு பிந்தைய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து 'சிறிதளவே' தங்கள் சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    ஆனால், அப்படி ஒரு வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளவதற்கு பிரிட்டன் தீவிரம் காட்டி வருகிறது.

    இரு தலைவர்களிடையே நடந்த 90 நிமிட சந்திப்பில் ஆப்கானிஸ்தான், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.

  9. தாலிபனுக்கு இம்ரான் கான் விதிக்கும் நிபந்தனைகள்

    இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமர்
    Image caption: இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமர்

    ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதை தடுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

    பிபிசி உடனான நேர்காணலில், ஆப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் தாலிபன்கள் தலைமையிலான அரசை அங்கீகரிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என சில நிபந்தனைகளை இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

    விரிவாகப் படிக்க: தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு கல்வி மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது - பாகிஸ்தான் பிரதமர்

  10. பருவநிலை மாற்றம்: சீன அதிபர் ஐநாவில் முக்கிய அறிவிப்பு

    சீனாவுக்கு வெளியே தங்கள் நாடு நிலக்கரியைப் பயன்படுத்தும் எரிசக்தித் திட்டங்களை இனிமேல் தொடங்காது என்று சீன அதிபர் ஷீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

    சர்வதேச அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

    'பெல்ட் அண்ட் ரோட்' (Belt and Road) எனும் தமது மாபெரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இந்தோனீசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா நிதியுதவி அளித்து வருகிறது.

    பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் உள்ள இலக்குகளை அடைய, கார்பன் வெளியீட்டைத் தடுக்க வேண்டும் என்பதால் சீனா மேற்கண்ட நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்று அழுத்தங்களைச் சந்தித்து வந்தது.

    china xi jinping united nations
  11. நரேந்திர மோதி அமெரிக்கா பயணம்

    ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 76வது பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்டவற்றுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று அமெரிக்கா கிளம்புகிறார்.

    நாளை (செப்டம்பர் 23) அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை வாஷிங்டனில் அவர் சந்திக்கிறார்.

    இதன்பின் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா ஆகியோரையும் தனித்தனியாகச் சந்திக்கிறார்.

    செப்டெம்பர் 24 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கும் மோதி, செப்டெம்பர் 25 அன்று ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பேசுகிறார்.

    26ஆம் தேதி அங்கிருந்து கிளம்பி இந்திய நேரப்படி 27ஆம் தேதி அதிகாலை இந்தியா வந்தடைகிறார் நரேந்திர மோதி.

    narendra  modi
  12. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    மெல்பர்னில் நிலநடுக்கம்
    Image caption: மெல்பர்னில் நிலநடுக்கம்

    தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில், புதன்கிழமையன்று ஆஸ்திரேலிய நேரப்படி காலை 9.15 மணிக்கு விக்டோரியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மெல்பர்ன் நகரத்தில் சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை. அது மிகவும் வருத்தமான நிகழ்வு எனவும் கூறியுள்ளார்.

    இந்த நிலநடுக்கத்தை தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ செளத் வேல்ஸ் பகுதிகளிலும் உணரப்பட்டது. 5.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்துக்குப் பிறகு, 4.0 மற்றும் 3.1 ரிடர் அளவில் அடுத்தடுத்த குறைந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளன.

    சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது. விக்டோரியா மாகாண அவசர சேவை அமைப்பு நிலநடுக்கத்துக்குப் பிறகான அதிர்வுகளை எதிர்கொள்ள மக்களை எச்சரித்திருக்கிறது. பலவீனமாக கட்டடங்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது, வாகனங்கள் ஓட்டுவதை தவிர்ப்பது போன்ற விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறது.

    இந்த நிலநடுக்கத்தால் சில டிராம் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில வானுயர் கட்டடங்கள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சில நகரவாசிகள் கூறுகின்றனர்.

  13. ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டிருக்கும் தாலிபன்

    தாலிபன்

    ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தாலிபன்கள், ஐநா சபையில் பேச, ஐநாவிடமே முறையாக அனுமதி கேட்டு கடந்த திங்கட்கிழமை கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்கள்.

    தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி இதை வலியுறுத்தி ஐநாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    நியூயார்க் நகரத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பேச தாலிபன் அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பாக தாலிபன் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை, ஐநாவின் கமிட்டி ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள்.

    அக்கமிட்டியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இக்குழு, அடுத்த திங்கட்கிழமை (செப்டம்பர் 27) ஐநா சபை கூட்டங்கள் நிறைவடையும் வரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

    எனவே அதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகள் படி குலாம் இசக்சாயே ஆப்கானிஸ்தானுக்கான ஐநாவின் தூதராக தொடர்வார். குலாம் இசக்சாய் செப்டம்பர் 27ஆம் தேதி ஐநாவில் ஒரு உரையாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் தாலிபன்களோ, அவரின் நோக்கம் ஆப்கானிஸ்தானை பிரதிபலிக்காது என கூறியுள்ளனர்.

    மேலும், தாலிபன் சுஹைல் ஷாஹீனை ஆப்கானிஸ்தானுக்கான ஐநா தூதராகவும் பரிந்துரைத்துள்ளது. முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதி, ஆப்கனின் உண்மையான பிரதிநிதி அல்ல எனவும் தாலிபன்கள் கூறியுள்ளனர்.