Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. நேரலை நிறைவடைகிறது

    நேயர்களுக்கு வணக்கம்!

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்புபக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள்வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. கழிவுநீர் தொட்டியின் மேல் பச்சிளம் பெண் குழந்தை வைத்தது யார்? போலீஸ் விசாரணை

    குழந்தை

    திருச்சி மாவட்டம் முசிறியில் அரசு மருத்துவமனை . மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியின் மேலே இன்று காலை பை ஒரு இருந்துள்ளது. பையில் அசைவு தென்படவே அவ்வழியே சென்ற மருத்துவமனை ஊழியர் பையை திறந்து பார்த்தபோது அதில் பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர்கள் இதுகுறித்து தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அவரது உத்தரவின் பேரில் உடனடியாக பணியில் இருந்த மருத்துவர்கள் குழந்தையை மீட்டு அவசர சிகிச்சை அளித்து பத்திரமாக இன்குபேட்டரில் வைத்தனர். பின்னர் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மருத்துவமனைக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பானுமதி, மாலிக் ஆகியோர் அங்கிருந்த சிசிடிவி கேமரா மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்களிடம் பச்சிளம் குழந்தையை விட்டு சென்றவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    முதலுதவி சிகிச்சைக்கு பின் பச்சிளங்குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு 28 நாட்கள் அங்கு பராமரிக்கப்பட்டு அங்கிருந்து திண்டுக்கல்லில் செயல்பட்டுவரும் தொட்டில் குழந்தை திட்டம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    பெற்ற குழந்தையை செப்டிக் டேங்க் மீது வைத்துவிட்டுச் சென்ற அந்த தாய் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் முசிறி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  3. தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பா என சந்தேகம்

    கொரோனா

    நைஜீரியாவிலிருந்து வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2-3 நாட்களுக்கு முன்பாக நைஜீரியாவிலிருந்து வந்தவர்களில் சிலருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் ஒருவருக்கு மட்டும், கொரோனா வைரசின் மரபணுவில் மாற்றம் இருப்பதைப் போலத் தென்பட்டது.

    "இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அதன் பிறகு அவரது குடும்பத்தினருக்குச் செய்யப்பட்ட சோதனைகளில் 6 பேருக்கு இதேபோன்ற பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களது மாதிரிகள் பெங்களூருக்குஅனுப்பப்பட்டுள்ளன. நாளைக்குள் இது தொடர்பான முடிவுகள் தெரியவரலாம்" என செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் மா. சுப்பிரமணியன்.

    இந்த ஏழு பேருக்கும் சோதனையின்போது கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏதுமில்லையென்றும் தற்போது லேசான உடல்வலி, சளி போன்ற மிதமான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

    கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டிற்கு கொரோனா ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து 11,481 பேர் வந்துள்ளனர். கொரோனா ரிஸ்க் அதிகம் இல்லாத நாடுகளில் இருந்து 58,745 பேர் வந்திருக்கின்றனர்.இவர்களில் ஒட்டுமொத்தமாக 37 பேர்பாதிப்புக்கு உள்ளானார்கள். நான்கு பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.

    இந்தியாவின் பல மாநிலங்களில் 20 முதல் 30 ஆயிரம் தினசரி பரிசோதனைகளே செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டில் தினமும் சுமார் ஒரு லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

  4. படிக்கட்டில் தொங்கி சென்ற மாணவர்கள் - தனியார் பேருந்து பறிமுதல்

    மாவட்ட ஆட்சியர்

    நாகை மாவட்டத்தில் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்ததால் தனியார் பேருந்தை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த தனியார் பேருந்து அதிக அளவிலான பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றது. அப்போது பேருந்தில் வந்த பல மாணவர்கள் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

    அப்போது அவ்வழியே காரில் சென்ற நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இதனைக் கவனித்து உடனடியாக புகைப்படம் எடுத்து அதை வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    இதையடுத்து நாகை அடுத்த புத்தூர் அருகே தனியார் பேருந்தை பிடித்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபு உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி வந்த பேருந்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடம் விசாரணை நடத்தினர்.

  5. தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்கும் சூழ்நிலை இருக்கிறது: அண்ணாமலை

    பிரபுராவ் ஆனந்தன்

    View more on twitter

    சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படைவாதிகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வந்ததாகவும், இலங்கை கொழும்பு குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    கன்னியாகுமரியில் நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த அண்ணாமலை நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    “தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்க எல்லாவிதமான சூழ்நிலையும் இருக்கிறது. அதனால் தமிழக அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

  6. லக்கிம்பூர் கேரி - அமைச்சர் மகன் சதித்திட்டம் செய்ததாக புகார்

    உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட நிகழ்வில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இந்த கொலையில் சதி திட்டம் தீட்டியதாக அதை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு நீதிபதியிடம் தெரிவித்துள்ளது.

    கைது செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ரா மீது சதித் திட்டம் தீட்டுதல், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலை முயற்சி வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட வேண்டுமென சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    அக்டோபர் மாத தொடக்கத்தில் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு கருப்புக் கொடி காட்ட வந்த விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்கள் கார் மோதியதில் விவசாயிகள் நான்கு பேர் உயிரிழந்தனர்.

    அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் டிரைவர், 2 பாஜகவினர், ஒரு பத்திரிகையாளர் என வேறு நான்கு பேர் உயிரிழந்தனர்.

    ஆஷிஷ் மிஸ்ரா
    Image caption: ஆஷிஷ் மிஸ்ரா
  7. உருகிவரும் அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறை: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

    ஜோனாதன் அமோஸ், அறிவியல் பிரிவு செய்தியாளர்

    அடுத்து வரும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள், அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறைகளில் ஒன்றில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    இதுவரை நிலையாக உள்ள த்வைட்ஸ் பனிப்பாறையின் மிதக்கும் பகுதி, கார் கண்ணாடி சிதறவதைப் போல் உடையக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். இதன் உருகும் விகிதம் அதிகரித்துள்ளதால், தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் த்வைட்ஸில் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஏற்கனவே, ஒவ்வோர் ஆண்டும், இந்த பனிப்பாறை 50 பில்லியன் டன் பனிக்கட்டியை பெருங்கடலில் குவிக்கிறது. இது உலகளாவிய கடல் மட்ட அளவில் குறைவான தாக்கத்தையேகொண்டுள்ளது.

    ஆனால், இவையனைத்தும் உருகினால், பெருங்கடலின் உயரத்தை 65 செ.மீ உயரப் போதுமான பனிக்கட்டி இந்த பனிப்பாறையின் வடிகால் படுகையில் உள்ளது.

    இத்தகைய "கடுமையான" சூழல் ஏற்பட பல நூற்றாண்டுகளுக்கு வாய்ப்பில்லை. ஆனால், புவி வெப்பமாயமாதல் தற்போது த்வைட்ஸில் மிகவும் வேகமாக எதிரொலிப்பதாக ஆய்வுக்குழு தெரிவிக்கிறது.

    " பெரும்பாலும் பத்தாண்டுக்குள் இந்தப் பனிப்பாறையில், பெரும் மாற்றம் ஏற்பட உள்ளது. வெளியான ஆய்வுகளும், வெளியிடப்படாத ஆய்வுகளும் இதையே குறிப்பிடுகின்றன", என்று சர்வதேச த்வைட்ஸ் பனிப்பாறை கூட்டமைப்பின் (International Thwaites Glacier Collaboration). அமெரிக்காவின் மூத்த ஒருங்கிணைப்பாளரும் பனிப்பாறை நிபுணருமான பேராசிரியர் டெட் ஸ்காம்போஸ் கூறுகிறார். "இது த்வைட்ஸ் உருகும் வேகத்தை துரிதப்படுத்தும். இதனால் பனிப்பாறையின் ஆபத்தான பகுதி அகலமாக வழிவகுக்கும் ", என்று பிபிசி நியூஸிடம் அவர் கூறினார்.

    த்வைட்ஸ் ஒரு பேருருவ வடிவமானது. கிட்டத்தட்ட பிரிட்டன் அல்லது ஃப்ளோரிடாவின் பரப்பளவுக்கு இணையானது. கடந்த 30 ஆண்டுகளில் இதிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் இரண்டு மடங்காகியுள்ளது. இதற்கு அடியில் பாயும் வெப்பமான நீர் பனிக்கட்டியை மெலிதாக்கி, வலுவிழக்கச் செய்கிறது.

    Thwaites: Antarctic glacier
  8. மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

    இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக பா.ஜ.க. ஆதரவாளரான மாரிதாஸ் என்ற யூடியூபர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். பா.ஜ.க. ஆதரவாளரான இவர் Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் தீவிரமாக பா.ஜ.க. ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

    டிசம்பர் 9ஆம் தேதி மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.

    View more on twitter
  9. காஷ்மீர் தாக்குதலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

    ஸ்ரீநகர் அருகே காவல்துறை வாகனம் மீது நடந்த தீவிரவாத தாக்குதல் கோழைத்தனமானது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து, அவர் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    “ஸ்ரீநகர் அருகே காவல்துறை வாகனம் மீது நடந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதல் பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படையினரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்”, என்று அவர் ட்விட் தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீநகரில் திங்கட்கிழமையன்று காவல்துறை வாகனம் மீது நடந்த தாக்குதலில், இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    View more on twitter
  10. டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு: சி.பி.ஐக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

    முரளிதரன் காசிவிஸ்வநாதன்

    2019ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    2019ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் நான்கு தேர்வை நடத்தியது. மொத்தமாக 5,575 மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர்.

    தேர்வு முடிவுகள் வெளியானபோது முதல் 100 இடங்களில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இடங்களில் இருந்த மையங்களில் இருந்து தேர்வு எழுதி மாணவர்களே பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றினர்.

    ஆகவே இதில் முறைகேடு இருக்கலாம் என்றும் இதனை மத்தியப் புலனாய்வுத் துறையின் மூலம் விசாரிக்க வேண்டுமென்றும் கோரி மதுரையைச் சேர்ந்த முகமது ரஃபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல் முருகன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கும்படி கூறி உத்தரவிடப்பட்டது.

  11. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

    ஆ.விஜயானந்த்

    அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், `இந்திய தேர்தல் ஆணையத்தை பிரதிவாதியாக சேர்க்க முடியாது' எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

    அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

    இவர்கள் இருவரும் போட்டியிட வலியுறுத்தி அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முதல் முன்னணி நிர்வாகிகள் வரையில் பலரும் அவர்களின் பெயர்களில் வேட்புமனுவை தாக்ககல் செய்தனர். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 6 ஆம் தேதி இருவரும் ஒருமனதாக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து ஓசூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ` அ.தி.மு.கவின் உள்கட்சித் தேர்தல் மிகவும் குறுகிய கால இடைவெளியில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 21 நாள்களாவது இடைவெளி இருக்க வேண்டும். தவிர, வேட்புமனுவை பெறுவதற்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை. இதற்காக வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படவில்லை. அ.தி.மு.கவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு ஒருநாள் போதுமானதாக இல்லை. இப்படியொரு தேர்தல் அறிவிப்பே நாடகமாக உள்ளது. இந்தத் தேர்தலுக்குத் தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கினை இன்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதுதொடர்பாக, அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்த வழக்கு முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், `இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல. இந்திய தேர்தல் ஆணையத்தை பிரதிவாதியாக சேர்ப்பதற்கு இதில் முகாந்திரம் இல்லை. உங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் இருக்கின்றன. அதிலே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்' எனத் தெரிவித்தனர். மேலும், அ.தி.மு.க உள்கட்சித் தேர்தலுக்காக தொடரப்பட்ட வழக்கினையும் தள்ளுபடி செய்துவிட்டனர்'' என்றார்.

    ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி
  12. யுக்ரைன் விவகாரத்தில் புதினை எச்சரித்த போரிஸ் ஜான்சன்

    ராணுவத்தினர்
    Image caption: ராணுவத்தினர்

    யுக்ரைன் விவகாரத்தில் நிலவும் பதற்றத்தை ராஜிய பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்றும், நிலைத்தன்மையை குலைக்கும் செயல்களுக்கு கடுமையான எதிர்வினைகள் ஏற்படும் என்று பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை எச்சரித்துள்ளார்.

    இந்த இருதலைவர்களும் திங்கட்கிழமை சந்தித்த போது போரிஸ் ஜான்சன் மேற்கூறிய தன் கருத்தை வெளிப்படுத்தினார். யுக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தோடும், ரஷ்யாவோடும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. அந்நாட்டுக்கு கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ரஷ்யாவோடு நெருக்கமான உறவு இருக்கிறது. ரஷ்யாவோ, யுக்ரை போரைத் தூண்டுவதாக குற்றம்சாட்டுகிறது.

    மேலும் நேட்டோ படைகள் கிழக்கு நோக்கி முன்னேறுவதை நிறுத்துவது மற்றும் ரஷ்ய எல்லைக்கு அருகில் ஆயுதங்கள் களமிறக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து உறுதி அளிக்க வேண்டும் என கூறுகிறது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜி7 மாநாட்டில், யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், கடுமையான எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என எச்சரித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  13. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர்களுக்கு 5 ஆண்டு பதவி சட்டம்

    View more on twitter

    இந்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர்களுக்கு ஐந்து ஆண்டு காலம் பதவி வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர உள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  14. நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்தவருக்கு ஒமிக்ரான் உள்ளதா என பரிசோதனை

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ₹ 2.50 கோடியில் 142.50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட திரவ ஆக்சிஜன் சேமிப்பு கலன் திறப்பு உள்ளிட்ட 5 புதிய பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில், மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் தமிழ்நாடு மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழ்நாட்டில் தற்போது 1, 310 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு வசதி. மாநிலம் முழுக்க 241 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இது போன்ற கட்டமைப்பு இல்லை. 50 வயதைக் கடந்த அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் என்று கூறினார்.

    இரண்டு நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த 47 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    அவருடைய மரபணு பரிசோதனையில் மாற்றம் தெரிகிறது. பெங்களூரு பரிசோதனை கூடத்திற்கு மறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் இருந்த 6 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சென்னை கிங் இன்ஸ்டியூட்டில் கண்காணிப்பில் உள்ளனர். பெங்களூர் ஆய்வக பரிசோதனை முடிவு இன்று மாலை அல்லது நாளை தெரியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்தவருக்கு ஒமிக்ரான் உள்ளதா என பரிசோதனை
  15. இத்தாலியின் சிசிலி விபத்து: ஏழு பேர் உயிரிழப்பு

    இத்தாலியின் சிசிலி நகரில் எரிவாயு கசிவு என்று சந்தேகிக்கப்படும் விபத்தில், நான்கு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து நடந்த மீட்பு பணியில், திங்கட்கிழமையன்று நான்கு சடலங்களை கண்டுப்பிடித்துள்ளனர்.

    சனிக்கிழமை மாலை ரவனுசாவிலுள்ள சிசிலி நகரில் நான்கு குடியிருப்பு கட்டடங்களில் நடந்த இந்த விபத்தில், இதுவரை குறைந்தபட்சம் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரை மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து தேடி வருவதாக தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.

    இந்த வெடி விபத்து காரணமாக, 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. ஆனால், எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். பல நாட்களாக தீவிரமான எரிவாயு வாடை வந்ததாக அங்கு குடியிருப்பவர்கள் கூறியுள்ளனர்.

    ஆனால், கசிவு குறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்று சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனமான இடால்காஸ் (Italgas) கூறியுள்ளது. மேலும் கடந்த 2020 மற்றும் 2021 முழுமையாக வலையமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது.

    Italy: Seven dead as rescuers find bodies in Sicily blast
  16. இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 7.4 நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

    இந்தோனீசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தின் கடலோரப் பகுதியில் 7.4 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டது.

    உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு இது நிகழ்ந்துள்ளது. புளோரஸ் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்துக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தேசிய கடல்சார் & வளிமண்டல நிர்வாகத்தின் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் தகவல்படி, நில நடுக்க மையத்தில் இருந்து 1000 கி.மீ சுற்று வட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை 5.6 அளவில் இந்தோனீசியாவின் கிழக்கு மாகாணத்தில் 5.6 அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

    Indonesia earthquake: 7.4 magnitude quake shakes South Sulawesi
  17. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்