திருமணத்திற்கு முன் ''கல்யாண யோகா''
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மணமேடையில் மிளிர கல்யாண யோகா (காணொளி)

பல இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடல் எடையைக் குறைக்கவும், தங்களது மனம் மற்றும் உடலைச் சரிசெய்து கொள்ள செல்லும் இடமாக சென்னையில் உள்ள தமிழக அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாறியுள்ளது.

உடல் எடையைக் குறைக்க பல விதமான மருந்துகள், ஜிம் போன்ற பயிற்சிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாத நிலையில் அவர்களின் இறுதி வாய்ப்பாக இந்த இடம் இருப்பதாக அங்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இளம் வயதினருக்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகளையும், திருமணத்திற்கு முன்பு உடல் எடையைக் குறைக்க சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்காக பிரத்தியேகமாக 'கல்யாண யோகா' என்ற பெயரில் இயற்கை உணவு மற்றும் யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது என இங்குள்ள மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவே மருந்து

சிகிச்சைக்காக வருபவர்களுக்கு மாத்திரைகளுக்குப் பதிலாக, பழங்கள் எடுத்துக்கொள்ளவும், நடைப் பயிற்சி செய்யவும், உடலில் பிரச்சனை உள்ள பகுதியை அறிந்து கொள்ள அக்குபங்சர் நடைபாதையில் நடக்குமாறு மருத்துவர்கள் குறிப்பு சீட்டில் எழுதுகின்றனர்.

உடல் எடை அதிகமாக இருந்த காரணத்தால் இரண்டு முறை தனது திருமணத்திற்குத் தடை ஏற்பட்டதை அடுத்து கோமதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மன உளைச்சலுடன் இருந்தார் காயத்ரி. ''65 கிலோ எடையுடன் இருந்த எனக்கு என்னை கண்ணாடியில் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. 15 நாட்கள் இங்கு பயிற்சி, சிகிச்சையை தொடர்ந்து, வீட்டிலும் பயிற்சி என ஒரு மாதம்,15 நாட்களில் 10 கிலோ வரை குறைத்தேன். தற்போது எனது எடை 54, '' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அவர்.

ஒரு நாளில் இந்த மருத்துவமனைக்கு வரும் 250 நபர்களில் குறைந்த பட்சம் 80 நபர்கள் வரை அதிக எடை மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.