ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போர்க்கால குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இராணுவ மன்றம்

இலங்கையில் போர்க்காலச் சம்பவங்கள் பற்றி ஆராய்ந்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கை இராணுவம் தொடர்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து பூர்வாங்க விசாரணை நடத்துவதற்காக இராணுவ நீதிமன்றமொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இராணுவப் படை தலைமையகத்தின் கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா தலைமையிலான ஐந்து பேரடங்கிய இராணுவ அதிகாரிகள் குழுவை இந்த விசாரணை மன்றத்திற்கு இலங்கை இராணுவத் தளபதி நியமித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி பிபிசியிடம் கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, அதனை நாடாளுமன்றத்திடம் ஜனாதிபதி முன்வைத்த பின்னர், கடந்த ஜனவரி மாத ஆரம்பத்திலேயே இந்த இராணுவ விசாரணை மன்றம் நியமிக்கப்பட்டுவிட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

'சனல் 4 வீடியோ'

இந்த விசாரணையின் போது, இராணுவ வீரர் ஒருவர் போர்க்குற்றம் புரிந்துள்ளார் என்று கண்டறியப்பட்டால், அதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் இராணுவச் சட்டக்கோவையின் படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் இராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி கூறினார்.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சி மற்றும் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் இராணுவ விசாரணை மன்றம் ஆராயும் என்றும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

போரின் இறுதி நாட்களில் காயப்பட்டிருந்த பொதுமக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டபோது, அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இராணுவப் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதேவேளை, போர் வலயத்தில் சிக்குப்பட்டிருந்த மக்களுக்கு மருந்துப் பொருட்களை அனுப்ப படையினர் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டதே என்று கேள்வி எழுப்பியபோதும் அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை இராணுவப் பேச்சாளர் பிபிசியிடம் மறுத்தார்.

போர்க்காலத்தில் மருந்துப்பொருட்களை அனுப்பிய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐநா தொண்டு நிறுவனங்களிடம் இது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.