ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சாந்தி சர்ச்சை குறித்து தேவாரம் கருத்து

தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் சாந்தி சவுந்திரராஜனுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்று வந்துள்ள செய்திகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறுவது சரியல்ல என்கிறார் வால்டர் தேவாரம்.

2006 ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சாந்தி சவுந்திரராஜன். எனினும் அவரது பாலினம் குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து பாலியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அவர் அதில் தோல்வியடைந்தார்.

இதையடுத்து அவரது வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. எனினும் தமிழக அரசின் சார்பில் அவருக்கு 15 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.

தற்போது அவர் மிகவும் வறிய நிலையில் இருக்கிறார் என்றும் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்கிறார் என்றும் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தமிழக அரசு தனக்கு வேலை வாய்ப்பு வழங்கி உதவி செய்யவில்லை என்று அவர் கூறியதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால் அவருக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறுவது சரியல்ல என்கிறார், இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவர் வால்டர் தேவாரம். சாந்திக்கு தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயிற்சாளர் வேலை அளிக்கப்பட்டு அதில் அவர் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக வேலையைவிட்டுச் சென்றுவிட்டார் என்றும் தேவாரம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவர் தற்போது அந்த பயிற்சியாளர் பணியில் இருந்தால் 10,000 ரூபாய்கள் வரை ஊதியம் கிடைத்திருக்கும் எனவும் கூறும் அவர், பயிற்சியாளரவதற்கான முறையான தகுதிகள் இல்லாத சூழலிலும் அவருக்கு வேலை அளிக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.

சாந்தி சவுந்திரராஜன் தற்போது வறிய நிலையில் இருக்கிறார் என்று ஊடகங்களில் வந்துள்ள மிகைப்படுத்தி கூறப்பட்டவை என்றும் தேவாரம் கூறுகிறார்.