பஸ்,ரயில்களில் பாலியல் தொல்லைகள்: இலங்கை முதலிடம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 டிசம்பர், 2012 - 18:06 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களுக்கு எதிராக புரியப்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தெற்காசியாவில் இலங்கையிலேயே அதிகளவில் நடக்கின்றன.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பஸ் மற்றும் ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களுக்கு எதிராக புரியப்படும் பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் தெற்காசியாவில் இலங்கையே முதலிடத்தில் இருப்பதாக அந்நாட்டின் சட்டஉதவி ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.விஜேரட்ண நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவித்தபோது, கடந்த பல மாதங்களாக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் விழிப்புணர்ச்சி நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலைமையில் தற்போது ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இன்னும் விழிப்புணர்வு செயற்பாடுகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, பொதுப் போக்குவரத்தின்போது பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நீதிமன்றம் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கும் என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் முறைப்பாடு செய்யவேண்டும்

ஆனால், தமக்கு ஏற்படுகின்ற தொந்தரவுகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பெண்கள் முறைப்பாடு செய்ய முன்வராமையாலேயே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தடையாக இருப்பதாகவும் எஸ்.எஸ்.விஜேரட்ண கூறினார்.

இப்படியான பிரச்சனைகளில் சாட்சியங்களை சேகரிப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றமையும் சட்டநடவடிக்கைகள் தோல்வியடையக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பெண் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடங்களிலேயே இதுபற்றி விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் அவசியம் என்றும், அதுபற்றி சமூக நிறுவனங்கள் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பலரும் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்கள்.

இப்படியான தொல்லைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரும் பெண்களுக்கு இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு உதவும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

பெண்கள் தமது கைத்தொலைபேசிகள் மூலம் உடனடியாகவே பொலிசாருக்கு முறைப்பாடு செய்யும்போது சட்டநடவடிக்கைகளை உறுதியாக எடுக்க வாய்ப்பாக இருக்கும் என்றும் எஸ்.எஸ்.விஜேரட்ண தெரிவித்திருந்தார்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.