ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முதல்வர் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது பாமக

  • 29 ஏப்ரல் 2013

மரக்காணம் வன்செயல்கள் குறித்து முதல்வர் ஜெயல்லிதா, பாட்டாளி மக்கள் கட்சி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ்குமார் மறுக்கிறார்.

ஜெயலலிதாவின் சட்டமன்ற அறிக்கையிலேயெ, இந்த வன்முறை, மரக்காணம் பகுதியில் நின்று உணவருந்திக்கொண்டிருந்த பாமகவினரை, அப்பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் வெளியேறச் சொன்னதால்தான் ஏற்பட்டது என்று கூறியிருப்பதாக கணேஷ்குமார் தெரிவித்தார்.

இந்த வன்முறைகள் குறித்து அதனால்தான் தாங்கள் சிபிஐ விசாரணையோ அல்லது சி.பி சி.ஐ.டி விசாரணையையோ கோருவதாகவும் கணேஷ்குமார் தெரிவித்தார்.

பாமகவினர் மாமல்லபுரம் சித்திரை நிலவு விழா தொடர்பான சுவரொட்டிகளில் இருந்த வாசகங்கள் வன்முறையைத் தூண்டும் வகையிலான வாசகங்கள் அல்ல என்று அவர் கூறினார்.

“வாளை எடுத்தால் ரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்கள் குல வழக்கம்” என்ற ரீதியிலான வாசகங்கள் பாரதிராஜாவின் திரைப்படத்தில் வந்த பாடல் வரிகள். படத்தில் வரும் வாசகங்களை அனுமதிக்கும்போது, அதையே சுவரொட்டியில் எழுதினால் என்ன தவறு என்றும் அவர் கேட்டார்.

இந்த விழாவில் வந்த பலர் சந்தனக் கடத்தல் வீரப்பன் படத்தை பதாகைகளாக வைத்திருந்தனர் என்ற முதல்வரின் குற்றச்சாட்டையும் கணேஷ் குமார் நிராகரித்தார்.

வீரப்பனின் படத்தை வையுங்கள் என்று பாமக தலைவர் கூறவில்லை. உண்மையில் பாமகவின் சட்ட்விதிகளின் படி, மார்க்ஸ், அம்பேத்கார் மற்றும் பெரியார் ஆகியோரின் படங்கள்தான் இடம்பெறவேண்டும், ஆனால் தர்மபுரி பகுதிய்ல் வசிக்கும் சிலர், வீரப்பனால் பலனடைந்திருக்கின்றனர். அவர்கள் இந்தப் படங்களை வைப்பதை பாமக தடுக்க முடியாது என அவர் தெரிவித்தார்.