ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிஎச்டி பட்டம் பெற்ற 73 வயது பாட்டி

Image caption அரவிந்தவல்லி (73)

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 73 வயதான பாட்டி அரவிந்தவல்லி, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் பாசுரங்களின் இசை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இன்று சனிக்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு முனைவர் பட்டம் அளிக்கப்பட்டது.

பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத நிலையில் திருமணமான இவர், பேரன் பிறந்த பிறகு தான் படிப்பைத் தொடர்ந்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் தொடர்ந்து வீணை வாசித்து வந்துள்ளார்.

பேரன்கள் பிறந்த பிறகுதான் தனக்கென்று நேரம் கிடைத்தது என்று கூறும் முனைவர் அரவிந்தவல்லி, தொலைத் தொடர்புக் கல்வி மூலமும் பிறகு பல்கலைக்கழகத்தில் நேரடியாக படித்தும் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வைணவ சித்தாந்தம் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், காயிதே மில்லத் கல்லூரி முதல்வர் சீதாலக்ஷமியின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

விவேகானந்தா கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றிய தனது தந்தை சி ஜெகன்நாதசாரியாரும், சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த தனது கணவரும் தன்னை படிக்கத் தூண்டியதாக அரவிந்தவல்லி கூறுகிறார்.

தன்னை கல்லூரி பேராசிரியர்கள் மரியாதையுடன் நடத்தியதாகவும் வயதான காலத்தில் கல்லூரி சென்று படித்தது தனக்கு சங்கடமாக இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இவரது ஒரு பேரன் சிங்கப்பூரிலும் மற்றொரு பேரன் அமெரிக்காவிலும் பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றனர்.