ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 01 - தொடர் அறிமுகம்

  • 18 ஆகஸ்ட் 2013
Image caption பர்மா தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அலசும் 'தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்' நெடுந்தொடர் ஞாயிறுதோறும் தமிழோசையில் ஒலிபரப்பாகிறது

பிபிசி தமிழோசை வானொலியில், ஆகஸ்டு 18 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், பர்மா (மியன்மார்) தமிழர்களின் வாழ்க்கை குறித்த புதிய பெட்டகத்தொடர் ஒலிபரப்பாகிறது.

இந்தப் பெட்டகத்தொடர் பர்மா தமிழர்களின் தற்போதைய வாழ்நிலையை ஆராய்வதுடன், அவர்களின் வரலாற்று ரீதியான நினைவுகள், அன்றாட வாழ்க்கை, மாறிவரும் பர்மாவில் தங்கள் எதிர்காலம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவைகளைப் பற்றி பேசுகிறது.

பர்மாவில் சுமார் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பார்கள் என்று அதிகாரபூர்வமற்ற கணிப்புகள் கூறுகின்றன. அவர்கள் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள்.

அவர்களது மூதாதையர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலத்தில் பர்மாவுக்கு வந்து, நிதி, வணிகம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் பணியாற்றினார்கள்.

பர்மாவில் 1948ல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்தபோது அங்கு வாழ்ந்த தமிழர்களின் நிலை சரியத்தொடங்கியது. 1960களில் பர்மாவில் ராணுவ ஆட்சி ஏற்பட்டபோது ,பர்மிய தமிழர்களில் பலர் பர்மாவை விட்டு வெளியேற நேர்ந்தது. ஆனால் அவர்களில் கணிசமானோர் பர்மாவிலேயே தங்கிவிட்டனர்.

பர்மாவில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று வந்துள்ள பிபிசியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுவாமிநாதன் நடராஜன், அங்கு வசிக்கும் வணிகர்கள், சமுதாயத் தலைவர்கள், விவசாயிகள் என்று பல தரப்பட்ட தமிழர்களை சந்தித்து பேட்டிகளை எடுத்தார்.

அவர்களது கலாசார அடையாளம் குறித்து இந்தப் பெட்டகத்தொடரில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த தொடரின் முதல் பகுதியில், தமிழகத்தில் இருந்து பர்மாவுக்கு தமிழர்கள் எந்த ஆண்டு வந்தார்கள் என்பது குறித்து விரிவாக ஆராயப்படுகிறது.