ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 02 - இரண்டாம் உலகப் போரின் தாக்கம்

Image caption தங்க மண்ணில் தங்கிய தமிழர்களின் வாழ்வில் இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி இரண்டாம் பாகம் அலசுகிறது ( பசுபதி ஐயரும் மகன் வெங்கட் ராமனும்)

பர்மாவில் 19 ஆம் நூற்றூண்டில் குடியேறி, கடின உழைப்பால் சமூகத்தில் முன்னேற்றமடைந்திருந்த தமிழர்களின் வாழ்நிலையை இரண்டாம் உலகப்போரும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் கடுமையாக பாதித்தன.

அமெரிக்காவின் பர்ல் துறைமுகத்தை 1941 ஆம் ஆண்டு இறுதியில் தாக்கிய ஜப்பான், தென் கிழக்கு ஆசியா மீதான தரைவழித் தாக்குதல்களை துவக்கியது.

மலேசியா, தாய்லாந்து. சிங்கப்பூர் என பல நாடுகள் அடுத்தடுத்து ஜப்பான் வசம் விழுந்தன. 1942 இன் ஆரம்பத்தில் பர்மாவின் பல பகுதிகள் ஜப்பான் வசம் போயின.

பிளவுபடாத பிரிட்டிஷ் இந்தியாதான் போர் தயாரிப்புக்களுக்கு முக்கியப் பின்தளமாக இருந்து வந்தது.

ஜப்பானிடம் இந்தியா விழக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரிட்டிஷ் நிர்வாகம் செயல்பட்டது. இதனால், இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையேயான எல்லையில் கொட்டும் மழையில் அடர்ந்த காடுகளில் கடும் போர் நடைபெற்றது.

இந்தப் போர் பர்மாவை சின்னாபின்னமாக்கியது. ஆசியாவின் செல்வந்த நாடுகளுள் ஒன்றாக - ஸ்வர்ண பூமியாக – வளம் கொழிக்கும் தங்க பூமியாக அறியப்பட்ட பர்மா வறுமையில் விழுந்தது.

பர்மியத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தப் போர் தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியது. பர்மாவில் ஜப்பானியர்கள் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றாக சீர் குலைந்தது.

இந்தியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.

போரால் இந்தியாவுக்குப் போகும் வான் மற்றும் கப்பல் போக்குவரத்து முற்றாக தடைபட்டுவிட்டதால், லட்சக் கணக்கானோர் நாட்டின் வடக்கேயுள்ள அடர்ந்த காடுகள் வழியாக பல நூறு மைல்கள் நடந்து வட கிழக்கு இந்தியாவை அடைய முனைந்தனர்.

வழியில் பலர் புலிகளாலும், பாம்புகளாலும் கொல்லப்பட்டனர்.

Image caption டவுன்ஜி ஹாக்கி ஆணியில் பசுபதி ஐயர்

மலேரியா போன்ற நோய்களும், திடிரென ஏற்படும் காட்டு வெள்ளமும் உயிரைப் பறித்தன.

பர்மாவின் டவுன்ஜியில் இருந்த பசுபதி ஐயர் தனது நான்கு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் இந்தியாவை நோக்கிய நீண்ட நடை பயணத்தை துவக்கினார்.

மூன்று மாதம் நடந்த பிறகு தனி ஆளாகத்தான் அவர் இந்தியா வந்தார். அவரின் நான்கு பெண்களும், மனைவியும் வழியிலேயே மாண்டனர். அவர்களுக்கு இறுதிக் கிரியைகள் கூட செய்ய முடியாத சூழலில் இருந்த பசுபதி ஐயர் தனது கடும் பயண நினைவுகளை 'பர்மாவிலிருந்து நடையாய் நடந்து' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தற்போது சென்னையில் வசிக்கும் அவரின் 80 வயது மகன் வெங்கட்ராமன், இந்த நடை பயணமானது பசுபதி ஐயரை முற்றாக மாற்றிவிட்டதாகவும், அந்த நினைவுகளை நினைக்கும்போது தனது தந்தை சோகத்தில் முழ்கிவிடுவார் என்றும் தெரிவித்தார்.

போராக்குப் பின் பர்மா 1948 இல் சுதந்திரம் பெற்றது. புதிய நம்பிக்கை துளிர்விட்டது. ஆனால் 1962 இல் இராணுவம் ஆட்சியைப் பிடித்து விட்டது. அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இந்தியர்களின் நிலை மேலும் மோசமானது. இதையடுத்து ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பினர். அங்கே இருந்த தமிழ் மொழிப் பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டதால் அங்குள்ள தமிழர்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் பர்மியர்களுக்கு கொடுக்கப்பட்டன. இதனால் தமிழ் கிராமங்களின் தன்மை மாறியது. தேசியமயத்தால் தமிழ் சமூகம் நிலை குலைந்தது என்றுதான் சொல்லவேண்டும். பர்மிய மொழிக்கு கொடுக்கப்பட்ட முதலிடம் காரணமாக தமிழர்கள் அரசு வேலைகளில் இருந்து ஒரங்கட்டப்பட்டனர். தற்போது கூட தமிழர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும் – வர்த்தகர்களாகவுமே இருக்கின்றனர்.