ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பகுதி 03- கிராமங்களில் வாழும் தமிழர் நிலை

  • 1 செப்டம்பர் 2013
Image caption பர்மிய கிராமங்களில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையும் சவால்களும் பற்றி இந்த பாகம் ஆராய்கிறது

கிராமங்களில் வாழும் தமிழர்களின் நிலையும் அவர்கள் சந்திக்கும் சவால்களும்

பர்மாவில் வேளாண் தொழில் புரியவே இந்தியாவிலிருந்து தமிழர்கள் பெருமளவு குடிபெயர்ந்து சென்றனர்.

இன்று கூட பெரும்பான்மையான தமிழர்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர்.

ரங்கூனில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் புகழ் பெற்ற பிலிகன் முனீஸ்வரன் கோயில் உள்ளது. பிலிகன் கிராமத்தில் 150 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன.

இவர்கள் தமிழகத்தின் ஒரத்தநாடு, மன்னார் குடி போன்ற இடங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள்.

இக்கிராமத்தில் உள்ள ஆண்கள் தமிழ்நாட்டு கிராம மக்களைப் போலவே கைலி அணிந்துள்ளனர். வயதான பெண்கள் சேலையும் - இளம்பெண்கள் பெரும்பாலும் பர்மிய உடைகளையும் அணிந்துள்ளனர்.

பல வீடுகள் மரத்தால் கட்டப்பட்டுள்ளன. தமிழர்கள் பெரும்பாலும் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயக் கூலிகளாக இருக்கும் பலர் கல்வி வாசனையற்று இருக்கின்றனர்.

தென் பர்மாவில் பல கிராமங்களில் தமிழர்கள் வாழ்கின்றனர். பர்மாவில் விவசாயத்துக்கு வித்திட்டது தமிழர்களே என்று பெருமை பொங்க கூறினார் பிலிகன் கோயில் நிர்வாகி உலகநாதன்.

Image caption விவசாயக் குடும்பமொன்றின் குடியிருப்பு

தமிழர்கள் மிகுந்த வசதியுடன் இல்லை என்றாலும் சாப்பிடுவதற்கு கஷ்டப்படாமல் வாழ்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

தேசிய மயமாக்கலின் போது தமிழர்களின் நிலங்கள் பல அரசால் பறிக்கப்பட்டு பர்மியர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன.

சிலர் தமது நிலத்தை பர்மியர்களிடமிருந்து மீண்டும் வாங்கியுள்ளனர். வேறு சிலர் அரசாங்க நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

பிலிகன் கிராமத்தில் சிமெண்ட் சாலையும் மின் வசதியும் உள்ளது. மக்கள் பொதுவாக மன நிறைவுடன் இருக்கின்றனர்.

இமயத்தில் துவங்கும் ஐராவதி ஆறும் இன்ன பிற ஆறுகளும் நாட்டை வளப்படுத்துகின்றன. பொய்க்காமல் பெய்யும் மழையால், கடும் பொருளாதாரத் தடைகள் இருந்த காலத்தில் கூட அங்கு உணவு உற்பத்திக்கு பஞ்சம் இருக்கவில்லை.

மெல்ல மெல்ல வேளாண்மை இயந்திர மயமாகிவருகிறது. சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உழவு இயந்திரங்கள் தற்போது அதிகளவில் புழக்கத்தில் உள்ளன.

அதே நேரம் புதிய தலைமுறையினர் விவசாயத்தை விட்டு நகர்ந்து செல்ல ஆரம்பித்துள்ளனர். பலர் வெளிநாடுகளுக்கும் செல்ல முனைகின்றனர்.

Image caption பிலிகன் கோயில் நிர்வாகி உலகநாதன்

தரமான கல்விக்கூடங்கள் இல்லை. மருத்துவ வசதிகள் இல்லை என்பதை கிராமங்களில் பரவலாக கேட்க முடிகிறது.

தமிழர்கள் மத்தியில் குடிப்பழக்கம் அவர்களின் முன்னேற்றத்தை அழிக்கக் கூடிய அளவுக்கு அதிகரித்து வருகின்றது.

பர்மாவில் கொண்டு வரப்பட்ட தேசிய மயமாக்கலின் காரணமாக படித்த, நடுத்தர வர்க்க தமிழர்கள் 60களில் இந்தியா திரும்பிவிட்டனர்.

இப்போது ரங்கூன் உள்ளிட்ட நகரங்களில் வசிப்போர் விவசாயக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களே.

அவர்கள் பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேறி வருகின்றனர். கிராமங்களில் காணப்படும் பழைய சிந்தனைகள் முன்னேற்றத்தைத் தடுப்பதாக கூறுகிறார் ரங்கூன் கல்லூரி பேராசிரியர் தமயந்தி.