ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பயணிகளைப் பாதிக்கும் பாஸ்போர்ட் 'பேதம்'

Image caption இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் 52 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாத பயணம்

வெளிநாடுகளுக்கு பயணம் என்பது சில நாடுகளின் பிரஜைகளுக்கு எளிதாகவும் , வேறு பல நாடுகளின் பிரஜைகளுக்கு சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

முக்கியமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளின் பிரஜைகளுக்கு, பல வெளிநாடுகளுக்கு விசா முன்கூட்டியே வாங்காமலே செல்ல முடிகிறது.

ஆனால் வளர்முக நாடுகளின் பிரஜைகளோ வெளிநாடு செல்ல வேண்டுமென்றால், அதற்குரிய விசாவை முன்கூட்டியே அந்த நாடுகளின் தூதரகங்களுக்கு சென்று வாங்கியபிறகே, பயணம் செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது.

இது குறித்து ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற சர்வதேசப் பயணங்கள் குறித்த ஆய்வு நிறுவனம் ஒன்று, உலகில் சர்வதேசப் பயணம் செய்வதற்குரிய விசாவைப் பெறுவதற்கு மிகவும் கடினமான சூழல் இருக்கக்கூடிய நாடுகளாக, , ஆப்கானிஸ்தான் சோமாலியா, இராக், பாகிஸ்தான், எரித்திரியா, சூடான் , கொசொவோ, லெபனான் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை பட்டியலிட்டிருக்கிறது.

Image caption பாஸ்போர்ட்கள் பலவிதம்,பயணப் பிரச்சினைகளும் பலவிதம்

இலங்கை பாஸ்போர்ட் இருந்தால் உலகில் மொத்தம் 32 நாடுகளுக்கு மட்டுமே விசா பிரச்சினைகள் இல்லாமல் போக முடியும் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.

இந்தியப் பிரஜையாக இருந்தால், இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு, உலகில் மொத்தம் 52 நாடுகளுக்கு மட்டுமே விசா முன்கூட்டியே வாங்காமல் போக முடியும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

"பிரச்சினைகள் இருக்கின்றன"

இந்தியப் பயணிகளுக்கு, அவர்கள் இந்தியர்கள் அல்லது இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார்கள் என்பதாலேயே , இத்தகைய சிக்கல்கள் ஓரளவுக்கு எழுகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறார் அகில இந்திய சுற்றுலா முகவர்கள் சம்மேளனத்தின் பொருளாளர் ஏ.பஷீர் அஹமது .

இந்தியர்கள் படிக்க வெளிநாடுகளுக்குச் சென்றால், அங்கேயே வேலைக்காகத் தங்கிவிடுவது, மற்றும் அவர்களது குடும்பத்தவர்களும் அவர்களுடன் சென்று வசிக்கும் நிலை ஏற்படுவது, சிலர் சுருக்கமான பயண விசா வாங்கி சென்று பின்னர், அந்த நாடுகளிலேயே நீண்டகாலம் தங்கிவிடுவது போன்றவைகள் இது போன்ற பிரச்சினைகள் எழ ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

Image caption "பிரச்சினைகள் சில இருக்கத்தான் செய்கின்றன" --பயண ஏஜெண்டுகள் சம்மேளன பொருளாளர் பஷீர் அஹமது

ஆனால் இந்தியர்களின் வாங்கும் சக்தி அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையிலும், இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து வரும் சூழலிலும், இந்தியச் சுற்றுலாப் பயணிகளைக் கவர அமெரிக்கா போன்ற நாடுகளே இலக்குகளை நிர்ணயிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தெற்காசியாவுக்குள் இருக்கும் நாடுகளிடையே பாஸ்போர்ட் இல்லாமல் மக்கள் சென்றுவரக்கூடிய நிலை ஏற்படவேண்டும் என்பது சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் விருப்பம், ஆனால் இந்தப் பகுதியில் உள்ள நாடுகளில் நிலவும் உள்நாட்டு அரசியல் நிலவரம் சரியாக இல்லாதது இதற்கு தடையான ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது என்கிறார் அவர்.