ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பகுதி-06

Image caption கண்ணப்ப செட்டியார், இராமநாதன் செட்டியார், சீனிவாசன் செட்டியார் (இடமிருந்து வலமாக)

நகரத்தார்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

பர்மாவுக்கு சென்ற தமிழர்களில் கணிசமானோரின் மூதாதையர்கள், நகரத்தார்கள் என்ற நாட்டுக் கோட்டை செட்டியார்களால் தான் அழைத்து வரப்பட்டவர்கள். மற்ற தமிழர்கள் அங்கே நடந்த அரசியல் மாற்றங்களை சகித்துக் கொண்டு தமது வாழ்வை மீளத் துவக்கினாலும், செட்டியார்களின் நிலை முழுவதுமாக வீழ்ச்சியடைந்து போய்விட்டது.

ரங்கூனில் தற்போது வெறும் செட்டியர்கள் 6 பேர் தான் இருக்கின்றனர். அதில் இளையவர் 83 வயதாகும் இராமநாதன் செட்டியார். தற்போது இவர் நகரத்தார் கோயில்களை கவனித்துவரும் அறக்கட்டளையின் செயலாளராக இருக்கிறார்.

தமிழகத்தில் இன்று மிகவும் வசதியானவர்களாக இருக்கும் எண்ணிக்கையில் குறைவான நகரத்தார்கள் புதுக்கோட்டை, தேவக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகர்களைச் சுற்றியுள்ள 96 கிராமங்களை பூர்வீகமாக்க கொண்டவர்கள்.

ஒன்பது வேறுபட்ட கோயில்களைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்கின்றனர். ஒரே கோயிலை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளமுடியாது. ஜாதியை மீறி திருமணம் செய்பவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் – அவர்களின் சமூக நிலை எவ்வளவு உயர்வாக இருந்தாலும் நகரத்தார்களாக அங்கீகரிக்கப்பட மாட்டார்கள்.

இந்தியாவில் இருந்து 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வியாபாரத்துக்காக பர்மா வர ஆரம்பித்த செட்டியார்கள், 19 ஆம் நூற்றாண்டில் ஏராளமான ஆட்களை பாய்மரக் கப்பல்களில் அழைத்துக் கொண்டுபோய் விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் பெரும் நிலக்கிழார்களாக இருந்தனர். நிலங்களைக் குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டினர்.

ரங்கூனின் மையப் பகுதியில் இருக்கும் ஆறறை முருகன் கோயில்தான் இங்கு வந்த செட்டியார்களின் தலைமையகமாக இருந்துள்ளது. இந்தக் கோயிலின் தரைதளத்தில் ஆறு அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 10 முதல் 15 பேர் அமர்ந்து கொண்டு தத்தமது கணக்குப் பெட்டிகளை வைத்துக் கொண்டு- குத்தகைக்கு கொடுத்த நிலங்களில் வரவு செலவு கணக்கை எழுதும் பணியை செய்துள்ளனர்.

வட்டித் தொழில்

பல செட்டியார்கள் தமது வியாபாரத்தில் ஒரு பங்கை ஆறறை முருகனுக்கு அளித்தனர். இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டே கோயில் திருவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்துக்களின் வர்ணாஸ்ரம முறைப்படி வைஸ்யர்களாக வகைப்படுத்தப்பட்டவர்களே – பரம்பரை பரம்பரையாக வியாபாரத்தில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் இந்திய ஜாதியினரில் பெரும்பாலானோர் வைணவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் நகரத்தார்களோ அதிலிருந்து வேறுப்ட்டு சைவர்களாக இருக்கின்றனர்.

பெரும் பொருளீட்டிய செட்டியார்கள் வெளிநாடுகளில் இந்து கோயில்களைக் கட்டினர். தமிழ் வளர்த்தனர். இங்கே 60க்கும் மேற்பட்ட கோயில்களை அவர்கள் கட்டியுள்ளனர்.

Image caption ரங்கூன் ஆறறை முருகன் கோவில்

தமிழகத்தில் கல்வி வளர்த்தவர்களாக – புரவலர்களாக அறியவப்பட்ட ராஜா சர் அண்ணாமலை செட்டியார் உள்ளிட்ட பலர் இங்குதான் பெரும் பொருள் ஈட்டினர்.

பெரும்பாலும் ஆண்கள் மட்டும் தனியாக இங்கு வந்தனர். ரங்கூன் ஆறறை கோயிலுக்கு பின்னுள்ள விடுதியிலேயே உண்டு உறங்கி வேலை செய்தனர். செட்டியார்கள் கோலோச்சிய காலத்திலேயே பர்மாவில் இவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டியிருக்கவில்லை. அதேநேரம் செல்வம் புரண்ட காலத்தில் கூட சிக்கனமே வாழ்க்கை முறையாக இருந்ததுள்ளது.

வாரம் இரு நாட்கள் மட்டுமே அசைவ சாப்பாடு கொடுக்கப்படும் என்றும், காபி கிடையாது என்றும் அந்த நாள் நடைமுறையை நம்மோடு பகிர்ந்து கொண்டார் இராமநாதன் செட்டியார்.

வங்கித் தொழிலில் முன்னோடிகளாக இருந்த செட்டியார்கள் தான் இந்தியன் வங்கி, இந்தியன் ஒவர் சீஸ் வங்கி போன்ற வங்கிகளை ஆரம்பித்தனர். சுதந்திரமடைந்த பிறகு நிலங்கள் தேசிய மயமாக்கப்பட்ட பிறகே செட்டியார்கள் முழு மூச்சில் வட்டித் தொழிலுக்கு வந்ததாக கூறுகிறார் இராமநாதன் செட்டியார்.

ஆனால் வட்டித் தொழிலும் 1962 இல் தடை செய்யப்பட்டது. எனவே வேறு வழியின்றி அங்கிருந்த செட்டியார்கள் தமிழகத்துக்கு திரும்ப வந்தனர். ஒரு சிலர் சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

எந்தச் சமூகமும் வட்டிக் காரர்களைக் கொண்டாடியதாக வரலாறு காட்டவில்லை. 1930 களில் பர்மிய தேசியவாதிகளால் நடத்தப்பட்ட இந்தியர்களுக்கு எதிரான வன்முறைப் போராட்டத்தில் செட்டியார்களும் – வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களுமே குறிவைத்து தாக்கப்பட்டனர். மோசடி செய்வோராக, அநியாயம் செய்வோராக பாடப் புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் செட்டியார்கள் சித்தரிக்கப்பட்டனர்.

Image caption செட்டியார்களின் பழங்கால பொருள் பாதுகாப்புப் பெட்டகங்கள்

தாம் அநியாய வட்டி வாங்கவில்லை என்கிறார வட்டித் தொழில் செய்த கண்ணப்ப செட்டியார். இந்த காலத்து நியமங்களை வங்கித் துறையும் நிர்வாக கட்டமைப்பும் வளர்ச்சியடையாத அந்தக் காலத்துத்தோடு ஒப்பிட்டு மதிப்பிடக் கூடாது என்ற வாதம் செட்டியார்கள் தரப்பில் வைக்கப்படுகிறது. வட்டி வசூல் செய்வதற்காகவும், குத்தகை வசூல் செய்வதற்கும் தாம் வைத்திருந்த ஆட்கள் சிலர் முறைகேடாக நடந்து கொண்டனர் என்றும் அதனால் செட்டியார்கள் மீது பழி வீழ்ந்தது என்றும் வாதிடுகிறார் இராமநாதன் செட்டியார்.

அனால் மற்ற ஜாதிகளைச் சேர்ந்த தமிழர்கள் கூட செட்டியார்கள் தம்மை மோசமாக நடத்தியதாக புகார் கூறுகின்றனர். முன்பெல்லாம் செட்டியார்கள் கோயில் நிர்வாகத்தில் மற்றவர்களுக்கு பங்களிக்க மறுத்தனர் என்ற புகாரை பல இடங்களில் கேட்க முடிந்தது.

தற்போது எஞ்சியுள்ள செட்டியார்களும் 80 வயதைத் தாண்டிவிட்டனர். இவர்கள் ஜாதியை மீறி திருமணம் செய்துள்ளதால் இவர்களின் குழந்தைகள் நகரத்தார்களாக கருதப்படமாட்டார்கள். எனவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமது கோயில்களையும் பிற தமிழர்களிடம் ஒப்படைக்கும் நிலையில் ரங்கூன் செட்டியார்கள் உள்ளனர்.

பர்மியத் தமிழர் சமூகத்தின் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள செட்டியார்கள் பர்மிய சமூகத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் கடந்த காலமாய் மறைந்துவிட்டனர்.