ரயிலில் அமைச்சர் வீரப்ப மொய்லி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'எரிபொருள் சிக்கனம்' : மெட்ரோவில் பயணித்தார் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி

Image caption ரயிலில் அமைச்சர் வீரப்ப மொய்லி

எரிபொருள் சிக்கனம் மிக அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி, இந்திய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று புது தில்லியில் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுபடுத்த 'எரிபொருள் சிக்கனம்' மிக அவசியம் என்ற கருத்தை பல சந்தர்ப்பங்களிலும் தொடர்ந்து தெரிவித்து வந்தார் வீரப்ப மொய்லி.

கடந்த மாதம் 'எரிபொருள் சிக்கனம்' குறித்து பேசும்போது அவரும், அவரது அலுவலக ஊழியர்களும் வாரம் ஒரு முறை புதன்கிழமை தோறும் மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தப் போவதாக அறிவித்தார். அவரது அறிவிப்புப்படி இன்று காலை அலுவலகத்திற்கு கிளம்பிய அவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ரயிலில் ஏறி, அவரது அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள சென்ட்ரல் செக்ரட்ரியட் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து அலுவலகத்திற்கும் நடந்தே அவர் சென்றார்.

மெட்ரோ ரயில் பயணத்தை முடித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மற்றும் உயர் அதிகாரிகளிடமும் வாரம் ஒரு முறை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த தான் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.

அரசு அலுவலங்களிலும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரம் ஒரு முறை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளதாகவும், கடைபிடிக்க தவறினால் இதற்காக தண்டனை ஒன்றையும் வழங்க முடியாவிட்டாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இது அமையும் என நம்புவதாகத் தெரிவத்தார்.

தேவசகாயம் கருத்து

ஆனால், அமைச்சர் வீரப்ப மொய்லியின் இந்த நடவடிக்கை எந்தவிதமான பயனையும் தராது என்று கூறுகிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான தேவசகாயம்.

இதெல்லாம் வெறும் நாடகம் என்று கூறும் அவர், இந்த விடயத்தில் வீதிகளைப் பெரிதுபடுத்தி வாகன போக்குவரத்தை சுமூகமாக்குதல், அரசாங்க அதிகாரிகளுக்கான போக்குவரத்துக்கு அதிகம் செலவு செய்தல் போன்றவற்றை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக இப்படியான நடவடிக்கைகளால் எந்த விதமான பலனும் கிடையாது என்று அவர் கூறுகிறார்.

அவரது செவ்வியை இங்கே கேட்கலாம்.