ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'காமன்வெல்த் மாநாட்டை நடத்த இலங்கைக்கு தகுதி இல்லை': ஐதேக

Image caption காமன்வெல்த் மாநாட்டுக்கு இலங்கை தலைமையேற்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக காமன்வெல்த் விழுமியங்களை மீறி வருவதால் எதிர்வரும் காமன்வெல்த் மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு இலங்கைக்கு தகுதி இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அதனால், காமன்வெல்த் மாநாடு தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவித்திருக்கிறார்.

சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு, சுதந்திரமான நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் பொதுச் சேவைக்குழு ஆகியன இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று காமன்வெல்த் கண்காணிப்புக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும் அதுபற்றி அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Image caption ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடு தொடர்பில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன்

சுயாதீனமான பொலிஸ் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுக்கள் இல்லாதபடியாலேயே நாட்டில் அரசியல் ரீதியான கைதுகள் நடப்பதாகவும் கூறிய ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீரவின் கைது நடவடிக்கை ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தகுதியற்றது என்று கனடா அறிவித்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவ்வாறானதொரு நிலைப்பாடே எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காமன்வெல்த் விழுமியங்கள் மற்றும் அந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதை விமர்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலைப்பாட்டுக்கான காரணங்கள் பற்றி அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜனிடம் பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை இங்கே கேட்கலாம்.

ஐதேக தலைமைக்கான மோதல்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமைப் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று கட்சிக்குள்ளே இருந்துவரும் கோரிக்கைகள் பற்றி ரணில் தரப்பு என்ன கருதுகிறது என்று கேட்டபோது, ' ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை ஜனநாயக முறைப்படியே பதவி விலக்கமுடியும் என்று யோகராஜன் கூறினார்.

இதற்கிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தொடர்பான சிக்கல்கள் பற்றி ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் இன்று செவ்வாய்க்கிழமை ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.