ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பகுதி 09

Image caption தமிழ் முஸ்லிம்களின் சோலியா ஜாமி ஆ பள்ளி

பர்மாவுக்கு இந்தியா வழியாக 10 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் அறிமுகமானது. நாட்டின் மக்கள் தொகையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 4 சதவீதம். சீன முஸ்லீம்கள், உருது பேசும் முஸ்லீம்கள், வங்க முஸ்லீம்கள், பர்மிய முஸ்லீம்கள் என அவர்களுக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர் சோலியா முஸ்லீம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சோழ நாட்டில் இருந்து வந்தால் இந்தப் பெயர் வந்ததாக சமூகப் பெரியவர்கள் கூறுகின்றனர். தமிழ் முஸ்லீம்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாக இருக்கின்றனர். ரங்கூன் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் தான் தமிழ் முஸ்லீம்கள் அதிக அளவில் பர்மாவுக்கு வந்தனர்.

வரலாற்று ரீதியில் பர்மிய பௌத்த மன்னர்கள் பலர் மதசகிப்புத் தன்மை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். ஆனால் முஸ்லீம்களுக்கு எதிரான போக்கு அவ்வப்போது தலை தூக்கியுள்ளது. 16 ஆம் நூற்றாண்டிலும், 18 ஆம் நூற்றாண்டிலும் அங்கு ஆட்சி செய்த பர்மிய பௌத்த மன்னர்கள் ஹலால் உணவை தடைசெய்தனர். பெரும்பான்மையினர் மாட்டிறைச்சியை உண்டாலும், பசுவை பாதுகாக்க வேண்டும், ஹலால் உணவைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் தற்போது அங்கே ஒலிக்கின்றன.

1930களில் பர்மிய தேசியவாதிகளால் நடத்தப்பட்ட கலவரங்களின்போது வர்த்தகத்தில் முன்னணியில் இருந்த முஸ்லீம்களும் செட்டியார்களும் குறிவைக்கப்பட்டனர். இந்தியர்கள் பர்மியர்களை சுரண்டுவதாக தேசியவாதிகள் குற்றம்சாட்டப்பட்டது. இராணுவம் 1962 இல் ஆட்சியைப் பிடித்த பிறகு இராணுவத்தில் இருந்த முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். சமூக ரீதியாகவும் அவர்கள் ஒடுக்கப்பட்டனர்.

Image caption இந்தியாவின் கடைசி மொகலாய மன்னர் பஹதூர் ஷா ஜபார் ரங்கூனில் புதைக்கப்பட்ட இடம்

தற்போது விராத்து என்ற பெயருடைய புத்த துறவி 969 என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கத்தை நடத்திவருகிறார். இஸ்லாமியர்களின் கடைகளில் பொருட்களை வாங்கக் கூடாது என்றெல்லாம் அவர் பிரசாரம் செய்கிறார்.

சமீபத்தில் நடந்த வன்முறைகளால் வங்க தேசத்தோடு எல்லை கொண்ட ராக்கைன் மாநிலத்தில் வாழும் முஸ்லீம்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். வீடுகளை இழந்த பல ரொஹிஞ்சா முஸ்லீம்கள் உள்நாட்டிலேயே தொடர்ந்து அகதிகளாக இருக்கின்றனர்.

ரொஹிஞ்சா முஸ்லீம் தம்பதியினர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு எதிரான போக்கால் தமிழ் முஸ்லீம்கள் பலர் அச்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டு முகாம்களில் இருக்கும் முஸ்லீம்களுக்கு அரசு இயந்திரத்தின் மூலம் உதவிப் பொருட்களை வழங்கும் முயற்சிகளை பலர் செய்து வருகி்ன்றனர்.

பௌத்த துறவிகளின் முஸ்லிம்-எதிர்ப்பு பிரச்சாரம்

முஸ்லீம்கள் மத்தியில் அதிகரிக்கும் கடும்போக்கும், அவர்களின் பொருளாதார முன்னேற்றமும், அவர்களுக்கு எதிராக பௌத்த துறவிகளால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரமும் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்தாக்கத்தை பர்மாவில் வலுப்படுத்தியுள்ளது.

Image caption சோலியா முஸ்லிம் சன்மார்க்க சேவைக் குழுவின் தலைவர் அகமது அலி ஜின்னா

ஏழை முஸ்லீம்கள் இறந்தால் அடக்கம் செய்ய உதவி செய்யவும் - சமூகப் பணிகளை செய்யவும் சோலியா முஸ்லிம் சன்மார்க்க சேவைக் குழு 1972 இல் ஏற்படுத்தப்பட்டது. தமிழ் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இந்த அமைப்பின் தலைவர் , 'பெரும்பான்மையான பௌத்தர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கவில்லை - வெளியார் நினைப்பது போல நிலமை மோசமில்லை' என்கிறார்.

சுதந்திரப் போராட்ட காலகட்டத்திலும் அதன் பிறகும் முஸ்லீம்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக அரசில் அப்துல் ரசாக் கல்வி அமைச்சராக இருந்தார். லதீப் கான் என்பவர் நீதி அமைச்சராக இருந்துள்ளார். ஜனநாயக ஆட்சி மலர்ந்தால் நிலமை மாறும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

ஆங் சான் சூச்சியின் கட்சியில் முஸ்லீம்கள் முக்கியப் பொறுப்பில் இருந்தாலும், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அவர் தயங்கித் தயங்கியே கருத்து கூறிவருகிறார். வன்முறைகள் ரொஹிஞ்சாக்களை மட்டும் குறிவைத்து நடத்தப்படுவதால் - மற்ற முஸ்லீம்கள் இப்போதைக்கு நாம் தப்பித்தோம் என்ற நிலையில் இருக்கின்றனர்.

இந்தியாவை ஆண்ட கடைசி மொகலாய மன்னர் நாடு கடத்தப்பட்டு ரங்கூனில் சிறை வைக்கப்பட்டார். அவர் புதைக்கப்பட்ட இடம் தற்போது தர்காவாக இருக்கிறது. இவரை நாடு கடத்திய பிரிட்டிஷார் கடைசி பர்மிய மன்னரையும் அவரது குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தினர். கடைசி பர்மிய மன்னர் மஹாராஷ்டிராவின் ரத்தினகிரியில் தனது மூச்சைவிட்டார்.