ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எங்கே?: உறவினர்கள் கேள்வி

Image caption ஐநா மனித உரிமைகள் ஆணையர் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, காணாமல்போன தமது குடும்ப உறுப்பினரை மீட்டுத் தருமாறு கோரி தாய் ஒருவர் நடத்திய ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தலைநகர் கொழும்பிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ரத்தொளுவ என்ற இடத்தில் காணாமல்போனவர்களின் நினைவாக அமைந்துள்ள நினைவிடத்தில் நடந்த 23வது தேசிய நினைவு தினத்தில் கலந்துகொண்டவர்கள், யுத்த காலத்தில் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமது உறவினர்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினர்.

வடக்கு கிழக்கில் யுத்த காலத்தில் கடத்தப்பட்டும் காணாமல்போயும் உள்ளவர்களின் உறவினர்கள் உட்பட சுமார் 2000 பேரளவில் இந்த நிகழ்வில் இன்று கலந்துகொண்டிருந்தார்கள்.

பிபிசி தமிழோசையிடம் பேசிய காணாமல்போனோர் உறவினர்கள் சங்கத்தின் மன்னார் மாவட்டத் தலைவி மனுவல் உதயச்சந்திரா, வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் யுத்த காலத்தில் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட பலர் தொடர்பில் இன்னும் தகவல்கள் இல்லையென்று கூறினார்.

அண்மையில் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளை இலங்கை வந்திருந்தபோது, காணாமல்போனோரின் உறவினர்கள் அவரைச் சந்தித்து தமது முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் தலையீட்டில் தமது உறவினர்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக மனுவல் உதயச்சந்திரா கூறினார்.

ஆனால், காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தொடர்பில் நம்பிக்கை இல்லை என்றும் கூறிய அவர், புதிதாக பொறுப்பேற்றுள்ள வடக்கு மாகாணசபை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.