ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை'

Image caption ததேகூ தலைவர் சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன்

இலங்கைக் கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவது வட-இலங்கை மக்களை கடுமையாக பாதிப்பதாக வடக்கு மாகாணசபையின் மீன்பிடித் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற பாலசுப்ரமணியம் டெனீஸ்வரன் கூறுகிறார்.

இலங்கைச் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பொட்டம் ட்ரோலிங் (ஆழ்கடலில் தரையை துளாவி மீன்வளங்களை அள்ளிச் செல்லும் மீன்பிடி முறை) முறையைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் வட-இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதால் எதிர்காலத்தில் மீன்வளங்களே இல்லாத பகுதியாக தங்கள் பிரதேசம் மாறிவிடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

வாரத்திற்கு மூன்றுநாள் பொட்டம் ட்ரோலிங் முறையில் மீன்பிடிக்க இந்தியாவில் உள்ள அனுமதியைப் பயன்படுத்தியே இந்திய மீனவர்கள் தமது பிரதேசத்திற்குள் வருவதாகவும் அவர் கூறினார்.

வட இலங்கையின் மன்னார்,பேசாலை, பள்ளிமுனை, முத்தரிப்புத் துறை, வடமராட்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு வந்து மீன்பிடித்துச் செல்வதை இந்திய மீனவர்கள் பாரம்பரிய உரிமையாகக் கருதமுடியாது என்றும் அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார்.

Image caption தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக தமிழக முதல்வர் குற்றஞ்சாட்டுகிறார் ( படம்- இலங்கையில் பிடிபட்ட தமிழக மீனவர்கள்)

இதன் காரணாமாக, தமிழகம் சென்று முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும், தமிழக கரையோர சமூகங்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வடக்கு மாகாணசபை நடவடிக்கை எடுக்கும் என்றும் பிபிசி தமிழோசையிடம் பேசிய மீன்பிடித்துறை அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இலங்கை மத்திய அரசும் மத்திய மீன்பிடித்துறை அமைச்சரும், இந்திய மீனவர்களின் வருகையைத் தடுக்கும் விடயத்தில் தம்மோடு ஒத்துழைத்துச் செயற்படுவதாகவும் வடக்கு மாகாணசபை மீன்பிடித்துறை அமைச்சர் கூறினார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டுகிறாரே என்று கேட்டபோது, 'இருநாட்டு தமிழர்கள் மத்தியிலும் பிரச்சனையை உருவாக்க திட்டமிட்டு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது' என்று கூறினார் அமைச்சர் டெனீஸ்வரன்.

'இந்தத் தாக்குதல்கள் இடையிலுள்ள நபர்களால் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனா அல்லது இலங்கைக் கடற்படையினர் மீது குற்றஞ்சாட்டுவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராயவேண்டும்' என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசுடன் தொடர்புகளை பேணுவதற்கான முயற்சிகளில் வடக்கு மாகாணசபை நிர்வாகம் ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.