ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மூதூரில் 4 தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல்

இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் தமது வயல்களுக்கு சென்ற 4 தமிழ் விவசாயிகள் பெரும்பான்மையினரால் தாக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த 4 விவசாயிகளான, ஏ. தேவமனோகரன், மாணிக்கம் கோணலிங்கம், சிதம்பரப்பிள்ளை துளசிநாதன், வைரமுத்து கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மூதூர் பொலிஸாரால் சிகிச்சைக்காக மூதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரான நாகேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தில் கங்குவேலி கிராமத்தில் இருந்து 3 மைல்கள் தூரத்தில் அகஸ்திய ஸ்தாபனம் என்ற தமிழர்களின் பழமை வாய்ந்த இடத்துக்கு அருகே ஒட்டு, படுகாடு என்ற வயல் பிரதேசங்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் வயல்களை தமிழர்கள் பயிரிட்டு வந்ததாகவும் ஆனாலும், யுத்த காலத்தில் அவர்களின் அனுமதியின்றி இந்தக் காணிகளை சிங்கள விவசாயிகளும், ஊர்காவற்படையினர் சிலரும் செய்ததாகவும் நாகேஸ்வரன் கூறுகிறார்.

இவற்றை தாம் மீண்டும் செய்ய வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சென்ற போது அதனை சிங்கள விவசாயிகள் தர மறுத்ததாககூறப்படுகின்றது.

இதன் பின்னணியிலே இந்த 4 விவசாயிகளும் சிலரால் பிடித்து வைத்துத் தாக்கப்பட்டதாக தாக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறுகிறார்.

தாக்கியவர்கள் ஊர்காவற்படையினர் என்றும் அவர்களை தமக்குத் தெரியும் என்றும் தாம் பொலிஸாரிடம் கூறியுள்ளதாகவும் அந்த விவசாயி கூறுகிறார்.

இவை குறித்த விபரங்களை இங்கு நாகேஸ்வரனின் செவ்வியில் கேட்கலாம்.