ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சேனல் 4-வின் காணொளியும் இலங்கை மீது அதிகரிக்கும் அழுத்தமும்

  • 1 நவம்பர் 2013
Image caption இசைப்பிரியா இறுதிப் போரில் ஆயுத மோதலில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு முன்னர் அறிவித்திருந்தது

இலங்கையில் அடுத்த மாதம் உலக நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ள இருக்கின்ற காமன்வெல்த் உச்சிமாநாடு நடக்க இருக்கின்ற சூழ்நிலையில், இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் ஒரு அழுத்தமாக பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 புதிய வீடியோ செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மோதலில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் லெப்டினன் கர்ணல் இசைப்பிரியா என்றழைக்கப்படும் ஷோபா என்ற 27 வயது இளம்பெண், இறுதிக்கட்ட போரின்போது தப்பிச்செல்ல முற்படுகையில் இலங்கை இராணுவத்திடம் உயிருடன் பிடிபடும் காட்சியையே வெளியிட்டுள்ளதாக சேனல் 4 செய்தியாளர் கலம் மக்ரே கூறியிருக்கிறார்.

அந்தக் காட்சியில் மேலாடை இல்லாத நிலையில் சேறு நிரம்பிய குட்டையொன்றுக்குள் இருந்து வருகின்ற இளம்பெண்ணின் உடம்பை இராணுவத்தினர் வெள்ளைத் துணியொன்றால் மூடி அழைத்துச் செல்கின்றனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள்தான் அவர் என்று அருகிலிருக்கின்ற மற்ற இராணுவச் சிப்பாய்கள் கோசமிட, அதற்கு 'ஐயோ அவர் நானில்லை' என்று அந்தப் பெண் கூறுகின்ற காட்சிகளே சேனல் 4 வில் நேற்றிரவு புதிதாக வெளியாகின.

காமன்வெல்த் மாநாடு

Image caption இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது

இசைப்பிரியா விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, நிர்வாணகோலத்தில் கொல்லப்பட்டுள்ள அவரது சடலத்தின் படங்களை சேனல் 4 ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

இப்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில், பிடிபடும்போது காயங்கள் எதுவுமின்றி இருக்கின்ற இசைப்பிரியா, பின்னர் குழியொன்றுக்குள் மயங்கிய நிலையில் அல்லது பெரும்பாலும் உயிரிழந்துவிட்ட நிலையில் காணப்படுவதாக சேனல் 4 செய்தியாளர் கூறுகிறார்.

பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாகி முகத்தில் மோசமான காயங்களுடன் இசைப்பிரியா இறந்துகிடக்கும் ஏற்கனவே வெளியான காட்சியையும் சேனல் 4 இதனுடன் காட்டியிருக்கிறது. அதனுடன் தொடர்புடையவாறு ஏற்கனவே வெளியான, நிராயுதபாணிகள் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணகோலத்தில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகளும் உள்ளன.

ஏற்கனவே, மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என்றுகூறி கனடா பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டை இந்தியப் பிரதமரும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று தமிழகத்திலிருந்து குரல்கள் ஒலித்த வண்ணமுள்ளன.

பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரோனும் இலங்கையின் உரிமைப் பிரச்சனையை காமன்வெல்த் மாநாட்டில் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் மாநாட்டுக்கு இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், தாம் வெளியி்ட்டுள்ள புதிய ஆதாரம் உலகநாடுகளின் தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று சேனல் 4 கூறியிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் அதுகுறித்து சுயாதீனமான விசாரணைகளை நடத்தாவிட்டால், சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்படலாம் என்று ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

சரத் பொன்சேகா

Image caption போர் முடிவுக்கு வந்தபோது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டு கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார்

உயிருடன் பிடிபட்ட இசைப்பிரியா பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபோது இராணுவத்துக்கு தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை தொடர்புகொண்டு தமிழோசை வினவியது.

'12 ஆயிரம்பேர் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அவர்களில் இந்தப் பெண்ணும் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது. சரணடைந்த 12 ஆயிரம் பேர் பற்றிய ஆவணங்கள் எல்லாம் இராணுவத்தலைமையகத்தில் இருக்கவேண்டும். கடைசியில் அவரை யாரும் பார்த்தார்களா, எப்போது பார்த்தார்கள், இந்தப் படங்கள் எப்போது எடுக்கப்பட்டன போன்ற தகவல்களை ஆராய்ந்தால் தான் அது தொடர்பில் எதனையும் கூறமுடியும்' என்றார் சரத் பொன்சேகா.

இலங்கை இராணுவம் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இருந்தால் அந்த ஆவணங்களை ஆராய்ந்துபார்த்துதான் மறுக்கமுடியும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது எதிரணி அரசியல் தலைவர்களில் ஒருவருமான சரத் பொன்சேகா தமிழோசையிடம் கூறினார்.