ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டிஷ் இளவரசருக்கு மலையகத் தமிழர்கள் மனு

Image caption இளவரசர் சார்ல்ஸ் நுவரெலியாவில் தேயிலை தோட்டம் ஒன்றை பார்வையிட்டார்

பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்ட தமது வாழ்க்கையை முன்னேற்ற காமன்வெல்த் அமைப்பு ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உறுப்பு நாடுகளில் வறுமையை ஒழிக்கவும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தவும் காமன்வெல்த் அமைப்பு எடுக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் மலையக மக்களுக்கும் சென்றடைய உதவ வேண்டும் என இலங்கைக்கு சென்றுள்ள பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸிடம் மலையகத் தமிழர்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளவரசர் சார்ல்ஸிடம் சமர்ப்பிப்பதற்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை சௌமிய இளைஞர் நிதியம் கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதுவராலயத்திடம் கையளித்துள்ளது.

காமன்வெல்த் மாநாட்டை முன்னிட்டு இலங்கை சென்ற இளவரசர் சார்ல்ஸ், மலையகத்தின் கண்டி, நுவரெலியா உள்ளிட்ட சில பகுதிகளுக்கும் சென்றுபார்த்துள்ளார்.

இளவரசர் சார்ல்ஸை நேரடியாகச் சந்தித்து தமது குறைகளை முன்வைக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று கூறிய சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி. அந்தோனிமுத்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மனு இளவரசரிடம் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதை பிரிட்டிஷ் தூதுவராலயம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

Image caption மலையக மக்கள் குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார விடயங்களில் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்

எதிர்வரும் நாட்களில் கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதுவர் தம்மை சந்தித்துப் பேச எதிர்பார்த்துள்ளதாகவும் அந்தோனிமுத்து தெரிவித்தார்.

பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்புகளில், மிக மோசமான நிலைமையில் வாழ்ந்தும் மலையக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் காமன்வெல்த் அமைப்புக்கு முக்கிய பங்கு இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காமன்வெல்த் அமைப்பினூடாக மலையக பிரதேசத்திற்காக இயற்கை இடர் முகாமைத்துவ நிலையமொன்றை அமைத்துக் கொடுத்தல் மற்றும் பொருளாதார, கல்வி வாய்ப்புகளை மலையக இளைஞர்களுக்கும் பெற்றுக்கொடுத்தல் போன்ற அவசியமான தேவைகளில் பிரிட்டிஷ் அரச குடும்பம் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் செளமிய இளைஞர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

மலையகத் தமிழ் மக்கள் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் முக்கிய அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.