ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஜனாதிபதியின் அழைப்பின்றி மன்மோகன் வந்தால் எதிர்ப்போம்': ஐதேக

Image caption ஐக்கிய தேசியக் கட்சி தலைமை கொறடா ஜோன் அமரதுங்க

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளாத இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இனிமேல் யாழ்ப்பாணத்திற்கு வருவதாக இருந்தால் அதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் அழைப்பில் இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பிருப்பதாக அண்மையில் வெளியான செய்தியொன்றை மேற்கோள்காட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் கொறடா ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார்.

'இந்திய பிரதமர் யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாக செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. அதுவும் சி.வி. விக்னேஸ்வரனின் அழைப்பின் பேரில் அவர் வருகிறாராம். எங்கள் ஜனாதிபதியின் அழைப்பு இன்றி இந்திய பிரதமர் எப்படி இங்கு வரமுடியும்' என்றார் ஜோன் அமரதுங்க.

'விக்னேஸ்வரனின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் இங்குவந்தால் ஐக்கிய தேசியக் கட்சியான நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவிப்போம் என்று கூறிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் கொறடா, 'காமன்வெல்த் மாநாட்டுக்கு வரமுடியாது என்று கூறிய மனிதர், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் வருகிறாராம். அதன் நோக்கம் என்ன என்று புரியவில்லை. இந்த நாட்டை இரண்டாக பிளப்பது தான் அவர்களின் முயற்சியா என்ற சந்தேகம் எழுகிறது' என்றும் தெரிவித்தார்.

Image caption பிரதமர் டி.எம். ஜயரத்ன

இலங்கையின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை கொறடா ஜோன் அமரதுங்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

இதேவேளை, இதுபற்றி நாடாளுமன்றத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் சிலர் பிரதமர் டி.எம். ஜயரத்னவிடம் பதில் கேட்டனர்.

'எனது தனிப்பட்ட சிந்தனையின்படி, இந்தியப் பிரதமர் இங்கு வந்து நேரில் பார்த்தால் நல்லது என்று தான் எனக்குத் தோன்றுகிறது. வடக்கில் கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கின்ற நிலைமைகளை மற்றவர்கள் வந்து பார்ப்பதைவிட, இந்தியாவின் பிரதமரே வந்துபார்த்தால் மிகவும் நல்லது என்றார் பிரதமர்.

'இந்திய அரசாங்கத்துக்கு சர்வதேசமும் தேவைப்படுகிறது, இலங்கையும் தேவைப்படுகிறது, வாக்குகளும் தேவைப்படுகின்றன என்பதை தமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்றும் இலங்கையின் பிரதமர்.