ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒருபாலுறவு முழுக்க முழுக்க இயற்கையானது: நாராயண ரெட்டி

Image caption உரிமைக்கு போராடும் ஓருபாலுறவாளர்கள்

வயதுக்கு வந்த இரண்டு பேருக்கு இடையில் நடக்கும் சம்மதத்துடனான ஒருபாலுறவு குற்றச்செயல் என்று கூறும் இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகவும் தவறானது என்று கூறும் பாலியல் நிபுணர் மருத்துவர் நாராயண ரெட்டி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவுபோலவே, ஒருபாலுறவும் மருத்துவ ரீதியில் முழுக்க முழுக்க இயற்கையானதே என்கிறார்.

ஒருபாலுறவாளர்கள் நோயாளிகளோ, குறைபாடுடையவர்களோ அல்ல என்று கூறும் நாராயண ரெட்டி, பலருக்கு வலது கையால் எழுதும் பழக்கம் இருந்தாலும் சிலருக்கு இடது கையால் எழுதும் பழக்கம் இருப்பது எப்படி இயற்கையானதோ அதேமாதிரியானது தான் ஒருபாலுறவும் என்கிறார் அவர்.

ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு ஒருபால் உறவு அல்லது இருபால் உறவில் ஏன் நாட்டம் உருவாகிறது என்பதற்கு இன்றுவரை மருத்துவ ரீதியிலான காரணங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவுமில்லை, நிரூபிக்கப்படவும் இல்லை என்று கூறும் நாராயணரெட்டி, எப்படி ஒரு ஆணோ, பெண்ணோ இயற்கையிலேயே பிறக்கிறார்களோ, அதே மாதிரிதான் ஒருபால் உறவாளர்களும் இயற்கையிலேயே பிறக்கிறார்கள் என்கிறார் அவர்.

ஒருபால் உறவாளர்கள் யாரும் விரும்பியோ, ஆசைப்பட்டோ அல்லது புறச்சூழலால் தூண்டப்பட்டோ, பலவந்தப்படுத்தப்பட்டோ ஒருபால் உறவில் ஈடுபடுவதில்லை என்று கூறும் நாராயண ரெட்டி, ஒரு பால் உறவு என்பது அவர்களின் பிறப்போடு வரும் இயற்கையான அடிப்படை உணர்வு என்கிறார். அப்படிப்பட்ட இயற்கையான ஒருபால் உணர்வை, குற்றச்செயல் என்று கூறுவதன் மூலம் ஒட்டுமொத்தமாக மனிதர்களில் ஒரு தொகுதியை குற்றவாளிகளாக மாற்றுவது மருத்துவரீதியாகவும் சரி, சமூகரீதியாகவும் சரி சரியான அணுகுமுறையல்ல என்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை மாற்றும் விதமாக, இந்திய நாடாளுமன்றம் கூடி இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவை இந்திய அரசியல் சட்டத்திலிருந்து நீக்கும் வகையில் அரசியல் சட்டத்திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்கிறார் நாராயண ரெட்டி.