ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இலங்கையில் உடல் வலுவிழந்தோரை பாதுகாக்க சட்டம் வேண்டும்'

Image caption 'இலங்கையில் முன்னாள் போர் வலயங்களில் உடல் அவயவங்களை இழந்தவர்களின் நலன்களைப் பாதுகாக்க சிறப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் தேவை'

உடல்-அங்கவீனமானவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஐநாவில் கைச்சாத்திடப்பட்ட சர்வதேச உடன்படிக்கையை உள்நாட்டு சட்டமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

வடக்கு கிழக்கில் போரினால் உடல் அவயவங்களை இழந்தவர்களின் நலன்களுக்காக சிறப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் தேவைப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் நூற்றுக்கு 7 வீதத்துக்கும் அதிகமானவர்கள் விசேட தேவை உள்ளவர்களாக அல்லது உடல் அங்கவீனமானவர்களாக இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் டாக்டர் பிரதிபா மஹநாமஹேவா கூறியுள்ளார்.

'உடல் வலுவிழந்தவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால், இலங்கை ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ள ஐநாவின் சர்வதேச உடன்படிக்கையை முதலில் உள்நாட்டுச் சட்டமாக்கமாக்க வேண்டும்' என்றார் மஹநாமஹேவா.

புதிய சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியாக சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடனும் 150க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

'அடுத்த 6 மாதங்களில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை'

Image caption ஐநாவின் சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை, உள்நாட்டு சட்டமாக்க தாமதமடைந்துவருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகிறது

2009-ம் ஆண்டில் இலங்கையின் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றின்படி, நிறுவனங்கள் தங்களின் கட்டடங்களை அமைக்கும்போது உடல் அங்கவீனமுற்றவர்களின் வசதிகளையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதை மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 6 மாதங்களுக்குள் சகல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அரச மட்டத்தில் புதிய சட்டம் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அங்கவீனமானவர்கள் மற்றும் விசேட தேவை உள்ளவர்கள் தொடர்பில் சமூகத்தில் குரல்கள் எழுப்பப்பட்டிருக்காத நிலையிலேயே அரசாங்கம் சட்டம் கொண்டுவருவதில் தாதமடைந்து வந்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

'மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்து மக்கள் தங்களின் சொந்த செலவில் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கு வசதிகள் எதுவும் இல்லாத நிலையே இருக்கிறது. அவர்களுக்காக சிறப்பு வசதிகள், சிறப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் செய்துகொடுக்க எம்மால் முடியும். அதற்காக ஐநாவிடமிருந்து நிதியுதவியும் கிடைக்கிறது' என்றார் ஆணையாளர்.

போரில் கை-கால்களை இழந்த இராணுவ வீரர்களுக்கும் சிறப்பு வசதிகளை வழங்க உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

'முன்னாள் போர் வலயங்களில் உடல் அவயவங்களை இழந்தவர்கள் பற்றி கணக்கெடுத்துத் தருமாறு அங்கிருந்து வந்த சிவில் அமைப்புகளிடம் கேட்டிருக்கின்றோம். அதன்படி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மஹநாம தெரிவித்தார்.