ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'தமிழ்நாட்டில் பணிப் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதிய சட்டம் இல்லை'

இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களின் நிலை மோசமாகவே இருக்கிறது, அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் தரப்படவேண்டும் என்ற சட்டம் இல்லை என்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

Image caption 'வீட்டுவேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் இல்லை'--ரவிக்குமார்

இது குறித்து தமிழ்நாட்டில் முன்பிருந்த கருணாநிதி தலைமையிலான திமுக அரசு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம் ஒன்றை தனது கோரிக்கையை அடுத்து உருவாக்கியதாகக் கூறும் ரவிக்குமார், ஆனால், தமிழ்நாட்டில் வீட்டுப் பணியாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியச் சட்டம் வரும் நிலையில், இது மத்திய தர வர்க்க மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க்குமோ என்ற அச்சங்களாலும், அப்போது தேர்தல் வரும் சூழ்நிலை நெருங்கிவந்ததாலும், அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்கிறார்.

ஆனால் வெகுவாக நகரமயமாகிவரும் தமிழ்நாட்டில் , வீட்டு பணிப்பெண்கள் நிலை பெரும்பாலும் "அரை அடிமை" என்ற நிலையிலேயே இருப்பதாகவும், இது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்றும் கூறினார்.

சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே கூட , பணிப்பெண்களுக்கான தேவை அதிகம் இருக்கும் ஒரு சில பகுதிகளில் தவிர, மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் வீட்டுப்பணியாளர்கள் நிலை சுரண்டல் நிலையிலேயே இருக்கிறது என்கிறார் ரவிக்குமார்.

மற்ற மாநிலங்களில் கேரளா மற்றும் கர்நாடகா போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பணிப்பெண்களுக்கான குறைந்த பட்ச ஊதியச் சட்டம் அமலில் இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.