மாசேதுங் 120வது பிறந்த நாள் --சீனாவில் கொண்டாட்டங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாசேதுங் 120வது பிறந்த நாள் --சீனாவில் கொண்டாட்டங்கள்

நவீன சீனாவின் நிறுவனரான, மாசேதுங்கின் 120 பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் சீனாவெங்கும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷி ஜின்பிங் உட்பட சீனாவின் உயர் மட்டத் தலைவர்கள் பீஜிங்கில் உள்ள மாவோ உடல் வைக்கப்பட்டிருக்கும் நினைவகத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினர் என்று அதிகார பூர்வ செய்தி நிறுவனமான ஷின்ஹுவா கூறியது.

மாசேதுங்குக்கு சீனர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய மரியாதை என்பது, அவர் மறைவுக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட, பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதுதான் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ நாளேடான சீனா டெய்லி கூறியது.

சீன அரசியல்வாதிகள், அவர்களின் அரசியல் அங்கீகாரத்துக்கு மாசேதுங்கைப் பின்பற்றி, பாராட்ட வேண்டியிருக்கும் அதே நேரத்தில், அவரது கொள்கைகள் தற்போது காலாவதியாகிவிட்டன என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள் ; இந்த இரு நிலைகளையும் அவர்கள் சமநிலைப்படுத்தியே பார்க்கவேண்டியிருக்கிறது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

அவர்களின் பார்வையில், சீனாவில் கம்யூனிஸப் புரட்சிக்குப் பின்னர் நடந்த இரு பெரும் துன்பியல் சம்வங்களான, கலாசாரப் புரட்சியும், 'முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்' (The Great Leap Forward) என்ற சமுக பொருளாதாரத் திட்டமும், மாசேதுங்கின் கொள்கைகளால் விளைந்தவையாகும்.