கூடுதல் அதிகாரங்களைக் கோருகிறது மனித உரிமைகள் ஆணையம்

கூடுதல் அதிகாரங்களைக் கோருகிறது மனித உரிமைகள் ஆணையம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீறினால் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது புதிய திருத்தத்தின் நோக்கம்
படக்குறிப்பு,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீறினால் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது புதிய திருத்தத்தின் நோக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக கூடுதல் அதிகாரங்களை பெறுவதற்கான சட்டத்திருத்தம் ஒன்றைக் கோரியுள்ளது. அதற்கான பரிந்துரைகள் ஜனாதிபதி உள்ளிட்ட தொடர்புடைய அமைச்சு மட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

'1996-ம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டம்தான் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. உலகில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக கனடா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அரசதுறை மட்டுமன்றி தனியார் துறையைச் சார்ந்தவர்களின் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரித்து தீர்த்துவைக்கமுடியும். இலங்கையில் அப்படியான நிலைமை இன்னும் இல்லை' என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹநாமஹேவா.

'இப்போதுள்ள சட்டத்தின்படி, நாங்கள் முன்வைக்கின்ற பரிந்துரை ஒன்று நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மிகவும் நீண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல்போகின்றன' என்றும் கூறினார் ஆணையாளர்.

புதிய சட்டத்திருத்தத்தின்படி, மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைக்கின்ற பரிந்துரை ஒன்று நியாயமான காலத்துக்குள்- நியாயமான வகையில் நிறைவேற்றப்படாவிட்டால், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கோ அல்லது மாகாண உயர்நீதிமன்றத்துக்கோ தங்களின் பரிந்துரையை ஒரு சான்றிதழ் போல சமர்ப்பித்து அதனை நீதிமன்ற உத்தரவாக வலுப்படுத்தும் ஏற்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக 'நீதிமன்ற அவமதிப்பு' குற்றச்சாட்டை சுமத்தமுடியும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.

வரும் மார்ச்சில் ஜெனீவா அமர்வு

படக்குறிப்பு,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை பலப்படுத்துமாறு ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கோரியிருந்தார்

2013-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப் பகுதிக்குள் சித்திரவதைகள் தொடர்பான 563 முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை காவல்துறையினருக்கு எதிரானவை என்றும் ஆணையாளர் மஹநாமஹேவா கூறினார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் ஃபாஸ்ட் ட்ராக்-அதாவது விரைவான விசாரணை நடைமுறையின் கீழ் தீர்வு வழங்கவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரம் கோரியுள்ளது.

சில நாடுகளில் மனித உரிமைகள் ஆணைக்குழுக்களுக்கு குவாஸி ஜுடிசியல்- பகுதியளவு நீதிமன்ற அதிகாரங்கள் இருக்கின்ற போதிலும் அவ்வாறான அதிகாரங்களை இலங்கை ஆணைக்குழுவுக்கு வழங்க, 1996-இல் சட்டத்தைக் கொண்டுவந்த ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசாங்கம் முன்வரவில்லை என்றும் பிரதிபா மஹநாமஹேவா கூறினார்.

கடந்த காலங்களில் இலங்கையில் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காமன்வெல்த் மனித உரிமைகள் துறையின் உதவியுடன் தேசிய மட்ட விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் கூறினார்.

ஜெனீவாவில் வரும் மார்ச்சில் நடக்கவுள்ள மனித உரிமைகள் கூட்டத்துக்கு முன்னதாக இந்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதா உங்களின் எதிர்பார்ப்பு என்று தமிழோசை வினவியது.

'ஓராண்டுக்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாகத்தான் இந்த சட்டத்திருத்த வரைவைக் கொண்டுவந்திருக்கிறோம். ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல இது' என்று அவர் பதிலளித்தார்.

'ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை வந்திருந்தபோது, மனித உரிமைகளை பாதுகாக்கும் கட்டமைப்பை மேலும் கட்டியெழுப்புமாறு எங்களிடம் கூறியிருந்தார்' என்றும் மஹநாமஹேவா கூறினார்.