ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வீட்டுப் பணிப்பெண்களை பாதுகாக்க இலங்கை- சவுதி ஒப்பந்தம்

Image caption ஜோர்தானில் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த இலங்கைப் பணிப்பெண்ணின் உறவினர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர் ( படம் 2013- மே)

இலங்கை அரசு சவூதி அரேபியாவுடன் முக்கிய தொழில்சார் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை இன்று திங்கட்கிழமை கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான தொழில்-இடம், கூடுதல் சம்பளம் மற்றும் உரிமைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்கு இந்த இருநாட்டு ஒப்பந்தம் அடிப்படையாக அமைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பெருமளவிலான தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்கே செல்கின்றனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புள்ளிவிபரங்களின் படி, இலங்கைத் தொழிலாளர்கள் சுமார் நாலரை லட்சம் பேர் சவூதியில் உள்ளனர். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் பெண்கள்; குறிப்பாக, வீட்டுப் பணிப்பெண்கள்.

இலங்கைத் தொழிலாளர்கள் பெருமளவில் தொழில்புரியும் சவூதி அரேபியாவின் ரியாத், தமாம் மற்றும் ஜெட்டா ஆகிய மூன்று நகரங்களிலும் இலங்கைத் தூதரக அலுவலகங்களால் தொழிலாளர் பாதுகாப்பு நிலையங்கள் நடத்தப்பட்டுவருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய கூறினார்.

கடந்த காலங்களில் வீட்டுப் பணிப்பெண்கள் பலர் சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வீட்டு எஜமானர்களால் சித்திரவதைகளுக்கு உள்ளாகி இலங்கை திரும்பியுள்ளனர்.

பெண்கள் பலர் மர்மமான முறையில் உயிரிழந்து சடலங்களாகக் கூட இலங்கைக்கு வந்துசேர்ந்துள்ளதாக உறவினர்கள் முறையிட்டனர்.

வெளிநாட்டு தொழில் முகவர்கள் என்ற பேரில் போலி முகவர்களும் இடைத்தரகர்களும் இலங்கையின் மலையகத் தோட்டங்களை இலக்குவைத்து அதிகளவில் படையெடுத்துவருவதாக உள்ளூர் செய்தியாளர்கள் தமிழோசையிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசு முதலில் உள்ளூர் தொழிற் சட்டங்களை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் சமூக ஆர்வலர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.