ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பாகம் 15- தமிழர் அடையாளம்

Image caption இந்துத் தமிழர் ஒருவரின் வீட்டின் முன்பாக துளசிச் செடி

பர்மியத் தமிழர்கள் தங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதையும் அரச வேலைவாய்ப்புக்களில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் இந்த பாகத்தில் பார்க்கலாம்.

தமிழர்கள் பர்மாவில் சுமார் இருநூறு ஆண்டுகளாக வாழ்கின்றனர்.

கிராமங்களிலும், நகரங்களிலும் வசிக்கும் பல தமிழர்கள், பர்மியர், இந்து, தமிழர் ஆகிய மூன்று அடையாளங்களையும் சேர்த்தே பயன்படுத்துகின்றனர்.

இங்கிருக்கும் பலர் பர்மாவிலேயே ஐந்தாறு தலைமுறைகளாக இருக்கின்றனர். திருமணங்கள் கூட பெரும்பாலும் நெருங்கிய வட்டாரங்களுக்குள் நடக்கின்றன. சிலர்தான் இந்தியா சென்று மணம் முடிக்கின்றனர்.

கணிசமானோர் பர்மிய குடிமக்களாக அங்கீகரிக்கப்படவில்லை. குடியுரிமை பெறாதவர்கள் அரச வேலைவாய்ப்புகளில் உயர்ந்த நிலையை எட்ட முடியாது உள்ளதாக கூறுகிறார் ரங்கூனில் கல்லூரி ஆசிரியராக பணியாற்றும் தமயந்தி.

குடியுரிமையை அரசாங்கம் வழங்கிய கால கட்டங்களில் பல தமிழர்கள் அஜாக்கிரதையாக இருந்தமையால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று விமர்சனமும் சமூகத்தில் இருக்கிறது.

அரசு வேலைகளில் தமிழ் இளைஞர்களுக்கு நாட்டமில்லை

Image caption பர்மிய உடையில் தமிழ்ப் பெண்கள்

குடியுரிமை – பாஸ்போர்ட் இல்லாவிட்டால் கூட இந்தியாவுக்கு தரை மார்க்கமாக பலர் வந்து சென்றுள்ளனர்.

பர்மா சுதந்திரம் அடைந்த காலத்தில் இராணுவம், காவல்துறை, கல்வி, அரச நிர்வாகம் உள்ளிட்ட பல அரசதுறைகளில் தமிழர்கள் இருந்தனர். 1962 இல் முன்னெடுக்கப்பட்ட தேசிய மயமாக்கம் நடவடிக்கைக்குப் பின், பாதுகாப்புத் துறையில் இருந்து சிறுபான்மையினர் வெளியேற்றப்பட்டனர்.

விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழர்களே அரச நிர்வாகத்தில் உயர் பதவிக்கு வந்துள்ளனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்ற, மோல்மின்னில் இருக்கும் மு ந மாணிக்கம்.

தான் பணிபுரிந்த காலத்தில் பாரபட்சத்துக்கு உள்ளானதாகக் கூற முடியாது என்றாலும் தற்போது நிலைமை அப்படியல்ல என்கிறார் இவர்.

Image caption எல்ஆர்ஜி இளங்கோவன் மற்றும் சோலை தியாகராஜா

அதேநேரம் தகுதிவாய்ந்த பல தமிழ் இளைஞர்கள் அரச வேலைகளை நாடுவதில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அரசு வேலைகளில் சம்பளம் குறைவு என்பதாலும், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் குறைவு என்பதாலும் இளைய தலைமுறையினர் அரச வேலைவாய்ப்புக்களை விட சுய தொழில் செய்வதையே விரும்புகின்றனர். இதனால் அரசு வேலை கிடைக்கவில்லை என்பது சமூகத்தினரிடையே ஒரு பெரிய குறையாக இல்லை.

பர்மாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமது தமிழ்ப் பெயருடன், பர்மியப் பெயரையும் வைத்துக்கொண்டுள்ளனர். ஆவணங்களில் பயன்படுத்த எளிதாக இருக்கும் என்பதாலேயே மக்கள் இப்படிச் செய்வதாக கூறினார் ரங்கூன் வர்த்தகர் மு க முனியாண்டி.