ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா மரண அச்சுறுத்தலுக்கு நடுவில் நீதி வழங்கினார்'

படத்தின் காப்புரிமை courtofappeal.lk
Image caption இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா 7 ஆண்டுகள் பணியாற்றினார்

இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா நேற்று வியாழக்கிழமை மாலை திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிக் கிரியைகள் வரும் 26-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொரளை கனத்தை மயானத்தில் நடைபெறும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் இடையூறுகளுக்கும் நடுவே நீதி வழங்கிவந்ததாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பு (Sri Lanka Lawyers Collective) கூறியுள்ளது.

குறிப்பாக, தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி நீக்கத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்திருந்த நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளரான மூத்த சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு தகுதிகளும் அனுபவமும் இருந்தும், நீதித்துறை அனுபவம் குறைந்தவர்களும் நீதிமன்ற கட்டமைப்புக்கு வெளியில் இருந்தவர்களும் ஜனாதிபதியால் உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டதாகவும் வெலியமுன சுட்டிக்காட்டினார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜே.சி. வெலியமுன

எனவே, அரசாங்கம் நீதிபதிகளின் நியமனத்திலும் பதவிநீக்க வழிமுறைகளிலும் வெளிப்படைத் தன்மையான, நீதியான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளரும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநருமான ஜே.சி. வெலியமுன கோரிக்கை விடுத்தார்.

'இறுதி அரசியலமைப்புத் திருத்தங்களின்படி, ஜனாதிபதி எந்தவிதமான நடைமுறையும் என்றி எவரை வேண்டுமானாலும் இந்தப் பதவிகளுக்கு நியமிக்க முடியுமாக உள்ளது' என்று வெலியமுன கூறினார்.

'இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜாவின் பெயரைக் குறிப்பிட்டு, நீதிபதிகளின் பதவி உயர்வில் நிலவும் இந்த அநீதியான நடைமுறைக்குப் பதிலாக வெளிப்படையான பொறிமுறை ஒன்று அவசியம் என்று சுட்டிக்காட்டியிருந்தார்' என்றும் கூறினார் ஜே.சி. வெலியமுன.

நாட்டின் நீதித்துறை உட்பட சகல துறைகளிலும் சட்டம் ஒழுங்கு குலைந்துபோயுள்ளதாகவும் நீதித்துறையின் சுதந்திரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் வெலியமுன கூறினார்.

'ஜனாதிபதி உள்ளிட்ட ஒருசிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்துகிடக்கிறது' என்றும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.