ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோட்டாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பு பற்றி அமைச்சர் தொண்டமான் பதில்

படத்தின் காப்புரிமை CWC
Image caption வத்தளைத் தமிழ்ப் பள்ளிக்கூட காணிப் பிரச்சனை 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ந்தது என்கிறார் தொண்டமான்

இலங்கையில் மலையகப் பிரதேசங்களில் உள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வது பற்றியும் கொழும்பை அண்டிய வத்தளைப் பிரதேசத்தில் தமிழ்ப் பாடசாலை ஒன்றுக்கான காணியைப் பெற்றுக் கொள்வது பற்றியும் நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார்.

மேல் மாகாணத்தில் தலைநகர் கொழும்புக்கு அருகே- வத்தளைப் பிரதேசத்தில் தமிழ் பாடசாலை ஒன்றுக்கான காணியை பெற்றுக் கொள்வதில் கடந்த 25 ஆண்டுகளாக நீடித்துவந்த பிரச்சனை இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் கூறினார்.

இதேவேளை, மலையகப் பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்கும் பொருட்டு மலையகத் தமிழ் இளைஞர்களையும் காவல்துறையில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

முதற்கட்டமாக 200 மலையக இளைஞர்களை காவல்துறையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அளித்த வாக்குறுதியின்படி, மலையகத் தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் புதிய வீடமைப்புத் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிலமும் கிடைக்கக்கூடிய விதத்தில் குடியிருப்புகள் வழங்கப்படும் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

நிலத்துடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நாடாளுமன்றத்துக்கு செல்வதில்லை என்றும் அவர் உள்ளிட்ட மலையகத் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் மலையக மக்களின் பிரச்சனைகள் பற்றி வாய் திறப்பதில்லை என்றும் வந்துள்ள குற்றச்சாட்டுக்களைப் பற்றி தமிழோசை அமைச்சரிடம் தொடர்ச்சியாக வினவியது.

அந்தக் கேள்விக்கும் தமிழோசையின் மற்றபல கேள்விகளுக்கு அமைச்சர் தொண்டமான் அளித்த பதிலையும் நேயர்கள் இந்த செவ்வியில் கேட்கலாம்.