ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மக்கள் சுதந்திரமாக சாட்சியமளித்தனர்: ஜனாதிபதி ஆணைக்குழு

Image caption எல்எல்ஆர்சி பரிந்துரைகளின்படியே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டதாக தலைவர் பரணகம கூறுகிறார்

இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னால் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவருபவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டுக்கள் பற்றி தங்களுக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் 9 கிராமசேவகர் பிரிவுகளில் நடந்த விசாரணை அமர்வுகளின்போது, 'மக்கள் சுதந்திரமாக, சுயவிருப்பத்துடன்' தங்களின் வாக்குமூலங்களை அளித்துச் சென்றதாகவும் மக்கள் அச்சுறுத்தப் பட்டதாகவோ, பலவந்தப் படுத்தப்பட்டதாகவோ தமக்குத் தகவல் வரவில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

'நாங்கள் எந்தவிதமான அச்சுறுத்தலையும் விடுக்கவில்லை. எங்களுக்கு அருகில் பொலிஸார் வரவும் இல்லை. ஊடகவியலாளர்கள் வந்துபார்க்கவும் அனுமதி இருக்கிறது. மிகவும் வெளிப்படையாகத் தான் நாங்கள் இயங்குகிறோம்' என்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஆணைக்குழுவுக்கு சுமார் 15 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் வரையில் வடக்கு கிழக்கு சிவில் மக்களிடமிருந்து வந்தவை என்றும் 5 ஆயிரம் முறைப்பாடுகள் காணாமல்போன இராணுவவீரர்கள் தொடர்பான முறைப்பாடுகள் என்றும் மெக்ஸ்வெல் பரணகம கூறுகிறார்.

காணாமல்போன பொதுமக்களில் 75 வீதத்துக்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் என்றும் 20 வீதமானவர்கள் வரையிலேயே இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபின்னர் காணாமல்போனவர்கள் என்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்த ஆணைக்குழு 1990 முதல் 2009 வரையான காலப்பகுதியில் காணாமல்போனவர்கள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இறுதிப் போரில் காணாமல்போனோர் பற்றி இன்னும் ஆராயவில்லை

Image caption 75 வீதமான நபர்கள் விடுதலைப் புலிகளாலேயே காணாமல்போயுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறுகிறார்

இறுதிக் கட்டப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்கள் பற்றிய தகவல்களுக்கு என்ன ஆனது என்று தமிழோசை வினவியது.

'நாங்கள் கிளிநொச்சியில் இதுவரை விசாரணை நடத்தியுள்ள 9 கிராமங்களில் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை. அந்த மக்கள் இறுதிக் கட்டப் போரில் சிக்கவில்லை. வேறு பிரதேசங்களுக்குப் போனால் சிலநேரம் அந்தத் தகவல்கள் கிடைக்கலாம்' என்றார் பரணகம.

'காணாமல்போனவர்கள் இன்னும் உயிர்வாழ்கிறார்களா, அல்லது இறந்துவிட்டார்களா, எப்படி உயிரிழந்தார்கள் போன்ற விடயங்களை ஆராய்ந்து- பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரை செய்யுமாறு ஜனாதிபதி எங்களைக் கோரியுள்ளார்' என்றும் கூறினார் ஆணைக்குழுவின் தலைவர்.

இந்த ஆணைக்குழு எல்எல்ஆர்சி பரிந்துரைகளுக்கு ஏற்ப செயற்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதுபற்றி வினவியபோது, 'எல்எல்ஆர்சி ஆணைக்குழு பரிந்துரையின் படிதான் இந்த ஆணைக்குழு ஜனாதிபதியால் அமைக்கப்பட்டது' என்றார் அவர்.

காணாமல்போனவர்களுக்காக மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர்களின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்றும் தமிழோசை ஜனாதிபதி ஆணைக்குழு தலைவரிடம் கேட்டது.

'இல்லை' என்று அதற்குப் பதில் கூறிய மெக்ஸ்வெல் பரணகம, காணாமல்போனவர்களின் சடலத்தை பார்க்காமல் அவர்களின் மரணச் சான்றிதழை ஏற்க உறவினர்கள் விரும்பாது போகலாம் என்பதற்காக 'இல்லாதநபருக்கான சான்றிதழ்' (Certificate of Absence) ஒன்றை பரிந்துரையாக முன்வைப்பது பற்றி ஆலோசித்துவருவதாகவும் கூறினார்.