ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"கனிம ஏற்றுமதியால் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு பாதிப்புதான்"

படத்தின் காப்புரிமை Getty
Image caption இந்தியாவில் கனிம தொழில்துறையில் பெரும் ஊழல்கள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

இந்தியாவின் ஒடிஷா மாநிலத்திலிருந்து இரும்புத் தாது ஏற்றுமதியாவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை நாட்டின் கனிம வள அமைச்சு நிராகரிப்பதாகத் தெரிகிறது.

ஒடிஷாவில் இரும்புத் தாது ஏற்றுமதியை நிறுத்துகின்ற எண்ணமோ உற்பத்தி உச்சவரம்பு நிர்ணயிக்கின்ற எண்ணமோ அரசாங்கத்துக்கு இல்லை என இந்தியாவின் கனிம வள அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் இரும்புத் தாது கனிம அகழ்வு மற்றும் ஏற்றுமதி குறித்து ஆராய்ந்த முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான குழு ஒரிசாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்படுவதை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்றும் அங்கு தோண்டியெடுக்கப்படும் இரும்புத் தாதுவுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

ஒடிஷாவில் சட்டவிரோதமான முறையில் இரும்புத் தாது கனிம வளம் சுரண்டப்படுகிறது என்றும் இதனால் அரசாங்கத்துக்கு 59 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்நிலை தொடருமானால் இரும்புத் தாதுவை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் இந்தியாவில் எதிர்கால சந்த்தியினருக்கு ஏற்படும் என்றும் ஷா அறிக்கை எச்சரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் ஏற்றுமதியை நிறுத்தப்போவதில்லை என்ற இந்திய கனிம வள அமைச்சின் கூற்று வந்துள்ளது

இந்திய கனிம வள அமைச்சின் இக்கூற்று பற்றி தமிழோசையில் கருத்து வெளியிட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல விவகாரங்கள் ஆர்வலரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் ஷா அறிக்கையின் பரிந்துரையை இந்திய அரசு ஏற்க மறுப்பது தவறு என்று கூறினார்.

கனிம வளத்தை வைத்து உற்பத்திப் பொருட்களை உருவாக்கி இந்தியாவுக்குள் தொழில்துறையையும் வேலைவாய்ப்பையும் உருவாக்குவதால் அதிகமான பொருளாதார நலன்களை அடைய முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்யாமல் கனிம வளத்தை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் இந்திய பொருளாதாரத்துக்கு நஷ்டமே ஏற்படுகிறது என்று அவர் வாதிட்டார்.

தவிர கனிம வளத்தை நேரடியாக ஏற்றுமதி செய்வதால் அத்தொழிலில் பெரும் முறைகேடுகளும் அளவுக்கதிகமான சுரண்டலும் நடப்பதை அரசாங்கத்தால் தடுக்க முடியாமல் போகிறது என்று தேவசகாயம் கூறுகிறார்.

கனிம வள ஏற்றுமதியால் பொருளாதார பாதிப்புகளைத் தாண்டி அளவிட முடியாத சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படுவதாக அவர் விளக்கினார்.