ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'முழுமையான 13-ம் திருத்தத்துக்கு ஜனாதிபதி தயாரில்லை': வாசுதேவ

படத்தின் காப்புரிமை lanintegmin.gov.lk
Image caption தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

இலங்கையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் '13-ம் அரசியலமைப்பின் முழுமையான அமுலாக்கலுக்கு அரசாங்கம், குறிப்பாக ஜனாதிபதி, தயாராக இல்லை' என்று சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகிறார்.

நாட்டில் 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக உள்ள சில அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை அழைத்து சமூக நல்லிணக்க அமைச்சு நடத்தியுள்ள சந்திப்பு தொடர்பில் பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்வியின்போதே, அமைச்சர் வாசுதேவ இவ்வாறு தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் பற்றியும் அதனால் இலங்கை எதிர்நோக்கக்கூடிய சூழ்நிலை குறித்தும் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

'இப்போதுள்ள மனித உரிமைகள் பேரவையின் கட்டமைப்பின்படி, எந்தெந்த நாடுகள்-என்னென்ன வகையான நிலைப்பாடுகளை எடுக்கும் என்பது போன்ற விடயங்கள் குறித்தும் இலங்கை மீது ஏதாவது தடைகள் விதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படுமா?, இல்லாவிட்டால் இலங்கையை பணிக்கின்ற வெறும் தீர்மானமாக மட்டும் அது அமையுமா?, இல்லாவிட்டால் ஐநா ஊடாக தனியான ஒரு சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கும் நிலை ஏற்படுமா போன்ற நிலைமைகள் எல்லாம் இங்கு அலசி ஆராயப்பட்டன' என்றார் என்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.

அத்தோடு, இந்த சந்திப்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

அப்படியென்றால், 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டியது தானே. இப்படியான கோரிக்கைக்கு ஏன் அரசாங்கம் இன்னும் செவிசாய்க்கவில்லை என்றும் சமூக நல்லிணக்க அமைச்சரிடம் தமிழோசை வினவியது.

ஜெனீவாவில் இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும்?

படத்தின் காப்புரிமை AFP Getty Images
Image caption '13 பிளஸ்': 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்க கூடுதல் அதிகாரத்தை அரசியல்தீர்வுத் திட்டமாக முன்வைப்பதாக ஜனாதிபதி இந்தியத் தலைவர்களுக்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார்

'அரசாங்கம் இன்னும் அதற்கு தயாராக இல்லையே.. அரசாங்கம் என்றால் ஜனாதிபதி.. அவர் தான் இன்னும் அதற்குத் தயாராக இல்லை' என்று பதிலளித்த அமைச்சரிடம் ஜனாதிபதி ஏன் தயாராக இல்லை என்று மீண்டும் தமிழோசை வினவியது.

'அதற்கான முழுமையான காரணம் எனக்குத் தெரியாது. அவரது நிலைப்பாட்டின்படி தான் இந்த நிலைமை உள்ளது. இந்த 13-ம் அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி சில கருத்துக்களை கொண்டிருக்கிறார்' என்று பதிலளித்தார் வாசுதேவ.

இருந்தாலும் குறைந்தபட்சம் மற்ற மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களையாவது வடக்கு மாகாணசபையிலும் கிழக்கு மாகாணசபையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தம்மைப் போன்வர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியா உள்ளிட்ட இலங்கையின் நட்பு நாடுகளை ஜெனீவாவில் இலங்கைக்கு சாதகமாக இணங்க வைக்க வேண்டியிருக்கிறது என்றும் குறித்த புத்திஜீவிகளின் கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் வாசுதேவ தெரிவித்தார்.

அப்படியென்றால், இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற தீர்மானத்திற்கு எதிராக, அதாவது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடா இந்தக் கூட்டத்தில் பொதுவாக வெளிப்பட்டது என்றும் தமிழோசை அமைச்சரிடம் கேட்டது.

'இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்று எங்களுக்கு இன்னும் தெரியாது. இந்தியா சிலவேளை அமெரிக்காவுக்கு ஆதரவாக- குறித்த தீர்மானத்தை ஆதரிக்கும் என்று சில ஊகங்கள் வந்தன' என்றார் அமைச்சர்.

அதேநேரம், 'அமெரிக்காவிடமிருந்து வரக்கூடிய தீர்மானத்தின் பாரதூரமான செறிவைக் குறைத்து, இலங்கைக்கு சாதகமான நிலையை உருவாக்க இந்தியாவால் தான் முடியும்' என்றும் சிலர் வாதிட்டதாகவும் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் கூறினார்.

வெளிநாட்டுக் கொள்கையாக இந்தியாவுடன் இலங்கை ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும், அப்படி இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையால் எதனையும் செய்ய முடியாமல் போய்விடும் என்றும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் தமிழோசையிடம் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, ரெஜினோல்ட் குரே, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரும் இலங்கையின் முன்னாள் இராஜதந்திரிகளான தயான் ஜயதிலக்க, தமரா குணநாயகம் மற்றும் குமார் ரூபசிங்க உள்ளிட்ட புத்திஜீவிகளும் கலந்துகொண்டுள்ளனர்.