குழந்தை மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு வாபஸ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குழந்தை மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு வாபஸ் - காணொளி

பாகிஸ்தானில் லாகூர் நகரில், ஒன்பது மாதக் குழந்தை மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ஒன்பது மாதக் குழந்தையான, முகமது முசா கானின் குடும்பத்தினர் 12 பேர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் மீது போலிசாரைக் கொல்ல முயன்றதாக சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில். இந்தக் குழந்தையையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் போலிசார் சேர்த்திருந்தது, பாகிஸ்தானில் மட்டுமல்லாது, உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

லாகூரில் மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான எதிர்ப்பு ஒன்றின் போது இந்த சம்பவம் நடந்ததாகப் போலிசார் கூறினர்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட இந்த ஒன்பது மாத பச்சிளம் குழந்தை முதல் முதலாக , வாயில் பால் பாட்டிலுடன் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டபோது, அதை பாகிஸ்தான ஊடகங்கள் ஒளிபரப்பின.

" இவனுக்கு பால் பாட்டிலைக் கூட சரியாக வாயில் வைக்கத் தெரியாது, இவனைப் பார்த்துப் போலிசார் மீது கல்லெறிந்ததாகக் கூறுகிறார்களே!" என்று செய்தியாளர்களைப் பார்த்துப் புலம்பினார் அவனது தாத்தா.

ஆனால் சனிக்கிழமை நீதிமன்றத்துக்கு மீண்டும் வந்திருந்த மூசாகான் அமைதியாக இருந்தான். முதல் நீதிமன்ற விசாரணையின் போது, அவனது கைவிரல் ரேகைகளை போலிசார் எடுத்தபோது அந்தக் குழந்தை அலறியது.

இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்திருக்கவே கூடாது என்று நீதிபதி இன்று தெரிவித்தார்.

மூசா கான் மீது போடப்பட்ட வழக்கு விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தாலும், அவனது குடும்பத்தினர் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு தொடர்கிறது.

இவை குறித்த ஒலிக் குறிப்பற்ற ஒரு காணொளி.