கன்னியாகுமரி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆறு முனைப் போட்டி நிலவும் கன்னியாகுமரி தேர்தல் களம்

தமிழகத்தின் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது என்றால், கடைக்கோடி தொகுதியான கன்னியாகுமரி தொகுதியிலோ ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் களமிறங்கியிருக்கும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் உதயகுமார் ஆறு முனைப் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இவர் தவிர, பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் எச். வசந்தகுமார், அ.தி.மு.க. சார்பில் ஜான் தங்கம், தி.மு.க. சார்பில் எஃப்.எம். ராஜரத்தினம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பெல்லார்மின் ஆகியோர் களமிறங்கியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என்பதால் அ.தி.மு.க., தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் கிறிஸ்தவ வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கின்றன.

முன்பு நாகர்கோவில் என்ற பெயரில் இருந்த தொகுதி தொகுதி சீரமைப்பிற்குப் பிறகு கன்னியாகுமரி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

இந்தத் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாதபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

சுமார் பதினான்கு லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதி கடற்கரை, வனப்பகுதி, மலை சார்ந்த பகுதிகள், விவசாய நிலங்கள் என பல்வேறுவிதமான நிலப்பகுதிகளைக் கொண்டது.

மீன்பிடித் தொழிலும் சுற்றுலாவும் இத்தொகுதியின் வருமானத்தில் முக்கியப் பங்குவகிக்கின்றன.

ஆரம்பம் முதலே காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிபெற்றுவரும் இந்தத் தொகுதியில் 1999ல் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்று அனைவரையும் கவனிக்க வைத்தார்.

அதற்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியும் பிறகு தி.மு.கவும் வெற்றிபெற்ற தொகுதி இது.