ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அரசு விளம்பரங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு "சிறந்த முடிவு" -என்.ராம்

இந்திய அரசு ஊடகங்களுக்கு விளம்பரங்கள் தருவதைப் பற்றி நெறிமுறைகளை வகுத்து பரிந்துரைக்க, இந்திய உச்சநீதிமன்றம் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்திருப்பதை ஒரு “ நல்ல முடிவு” என்று “இந்து” பத்திரிகைக் குழுமத்தின் தலைவர் என்.ராம் கூறினார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த என்.ராம், அரசுகள் தாங்கள் ஊடகங்களுக்குத் தரும் விளம்பரங்களை, அவைகளின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிட்டு அவைகளின் நிலைப்பாட்டை மாற்ற ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன என்ற கருத்தில் ஓரளவு உண்மையிருக்கிறது என்றார்.

இந்தக் குழுவின் பரிந்துரைகள் உளச்சுத்தியுடன் அமல்படுத்தப்பட வேண்டுமானால், அதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அவசியம் , இல்லையென்றால் அதை அரசுகள் அமல்படுத்தாது என்றார் அவர்.

அரசுகள் தங்கள் அத்தியாவசியப் பணிகள் குறித்த செய்திகள் மக்களைச் சென்றடைய விளம்பரங்களைப் பயன்படுத்தலாம், அது போல தங்கள் திட்டங்கள் மற்றும் சாதனைகளையும் மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் அறிவிக்கலாம் என்று கூறிய ராம், ஆனால், இந்த விளம்பரங்கள் அரசுகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் துதி பாடவோ, அல்லது மிகைப்படுத்தப்பட்ட வகையில் சாதனைகளை பறைசாற்றவோ பயன்படுத்தப்படக்கூடாது என்றார்.

அரசு விளம்பரங்கள், மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த செய்திகளைக் கொண்டு செல்லத் தேவைப்படுகிறது என்றால், சுமார் 73 சதவீத மத்திய அரசு 2009-10ல் , ஆங்கில மற்றும் ஹிந்தி ஊடகங்களில் மட்டுமே தரப்பட்டன் என்ற ஒரு செய்தியை சுட்டிக்காட்டியபோது, இது நிச்சயமாக ஒரு முக்கியமான பிரச்சினை என்று கூறிய ராம், இது அரசியல் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கும் சமத்துவம் என்ற கோட்பாட்டை மீறுவதாகும் என்றார்.