பிரான்ஸின் கலே நகரிலிருந்து சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரான்ஸின் கலே நகரிலிருந்து சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றம்

பிரான்சின் வட புற துறைமுக நகரான, கலே நகருக்கு வெளியே, சட்டவிரோதமான வகையில் முகாமிட்டிருக்கும் சுமார் 800 குடியேறிகளை போலிசார் அப்புறப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் தங்கியிருக்கும் கூடாரங்களில் ஒவ்வொன்றாக நுழைந்த போலிசார், அங்கிருப்போரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களை போலிசார் கைது செய்யவில்லை.

குடியேறிகளை எங்கு போகவேண்டும் என்று போலிசார் கூறவில்லை என்று குடியேறிகள் நலனுக்காக செயல்படும் கலேய் குடியேறிகள் ஆதரவு அமைப்பு என்ற அமைப்பை நடத்தும் ஜொஹான்ஸ் டாக் பிபிசியிடம் கூறினார்.

இந்த இடத்தில் கூடாரமடித்துத் தங்கியிருப்பவர்களில் பலர் பல மாதங்களாக அங்கே இருக்கிறார்கள். அவர்கள் பிரிட்டனுக்கு லாரிகள் மூலமாக சட்டவிரோதமாக நுழைய முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பகுதியில் குடிநீர்ப் பற்றாக்குறையும், பொதுச் சுகாதார வசதியின்மையும் அங்கு ஸ்கேபிஸ் என்ற தோல் வியாதியை பரவச் செய்திருப்பதால் இது ஒரு சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆசிய, மத்திய கிழக்கு மற்று வட ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வந்துள்ள இந்தக் குடியேறிகள் வெளியேற்றப்படவேண்டும் என்று விதிக்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.

இவை குறித்த ஒலிக்குறிப்பற்ற பிபிசியின் காணோளி.