ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'வெளிநாட்டு முதலீட்டு வரிவிலக்கால் இலங்கைக்கு இழப்பு': ஐஎம்எப்

இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்கின்ற வரிச்சலுகைகள் மற்றும் வரிவிலக்குகள் போன்ற காரணங்களினால் இலங்கையின் வரிவருமானத்தில் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஐஎம்எப் என்ற சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடன்சுமையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை நாட்டின் 2014-ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சிவீதம் 7.8 ஆக இருக்கும் என்று மத்திய வங்கி மதிப்பிட்டுள்ள போதிலும், அது 7 வீதமளவே இருக்க முடியும் என்று எதிர்வுகூறியுள்ள ஐஎம்எப் நிறுவனம், அங்கு வரிவருமானம் குறைந்து காணப்படுகின்றமையே பிரச்சனைக்குரிய விடயம் என்பதையும் தெரிவித்துள்ளது.

ஐஎம்எப்- இன் உறுப்புநாடுகளின் பொருளாதார நிலை பற்றி ஆராயும் பேச்சுவார்த்தைகளுக்காக ஐஎம்எப் குழுவினர் கடந்த 10 நாட்களாக இலங்கையில் இருந்தனர்.

'வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிச்சலுகைகளும் வரிவிலக்கு காலங்களும் அளிக்கப்படுகின்றமை மூலம் நாட்டின் வரிவருமானங்கள் இழக்கப்படுகின்றன' என்றார் ஐஎம்எப் தூதுக்குழுவின் தலைவர் டொட் ஸ்நைடர்.

'கல்வியில் தலையிடவில்லை'

இதனிடையே, இலங்கையில் இலவசக் கல்வியை ஒழித்துவிடுதற்கான இணக்கப்பாட்டை அரசாங்கம் ஐஎம்எப்- உடன் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் முன்வைத்திருந்த குற்றச்சாட்டையும் ஐஎம்எப் பிரதிநிதி மறுத்துள்ளார்.

'கல்வித்துறையில் அரசு கூடுதல் செலவு செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. கல்வித்துறை பற்றி முடிவுகள் எடுக்கும் நிறுவனம் அல்ல. நாங்கள் பெரும்-பொருளாதார கொள்கைகளிலேயே அக்கறை செலுத்துகிறோம்' என்றார் டொட் ஸ்நைடர்.

2013-ம் ஆண்டில் இலங்கை பொருளாதாரம் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளைத் தாண்டி வளர்ச்சி கண்டுள்ளதாகவும், அடுத்த கட்ட தவணையும் சாதகமான அறிகுறிகளையே காட்டுவதாகவும் ஐஎம்எப் கூறுகின்றது.

இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய சவாலான நெருக்கடிகளில் அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமன்றி இலங்கையில் ஏற்படக்கூடிய திடீர் காலநிலை மாற்றங்களும் முக்கியமானவை என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.