ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தோற்றது குறித்து சுய பரிசோதனை , நீண்ட காலத் திட்டம் குறித்தும் ஆராய்வோம்- தங்கம் தென்னரசு

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக சந்தித்த தோல்வியை அடுத்து, கட்சியினை மறு சீரமைப்பது குறித்து அமைக்கப்பட்ட அறுவர் குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, கட்சி சுயபரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ளும் என்கிறார்.

அது மட்டுமல்லாமல், நீண்ட காலத் தொலைநோக்கில், அடுத்த தலைமுறைக்கும் பணி செய்யும் வண்ணம் நிலைத்து நிற்பது குறித்து ஆலோசனைகளை பல்வேறு மட்டங்களில் கேட்டறிந்து கட்சித் தலைமைக்குப் பரிந்துரைக்கும் என்றார் தென்னரசு.

இந்தக் குழு அறிவிப்பு இன்று வந்திருக்கும் நிலையில், குழுவின் வேலைகள் குறித்த வரம்புகள் என்ன, இந்தப் பரிந்துரைகள் தருவதற்கான கால அவகாசம் என்ன என்பது குறித்துத் தெரிந்தவுடன், குழு தனது வேலையைத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் தோல்விக்குக் காரணம் , அது கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரசுடன் கூட்டணி அரசில் பங்கேற்றிருந்த நிலையில், கட்சியின் சார்பில் மத்தியில் பங்கேற்ற அமைச்சர்கள் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும், கட்சியின் தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் மீது போதிய தாக்கம் செலுத்தாது போன்றவைதான் காரணம் என்று வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பதிலளித்த தங்கம் தென்னரசு, இந்த விமர்சனங்கள் , தோற்றது திமுக என்பதால் வெறும் குற்றச்சாட்டுகளாக உருவெடுத்து வருகின்றன. ஆனாலும், இவை குறித்தும் பரிசீலிக்கக் கட்சி தயங்காது என்றார்.

கட்சியில் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை,மக்கள் பிரச்சினைகளில் கட்சி கவனம் செலுத்துவதில்லை என்ற விமர்சங்களை மறுத்த அவர், திமுக தொடர்ந்து பெண்களுக்கும் பிற நலிந்த பிரிவினருக்கும் தொடர்ந்து உரிய இடம் அளித்துவந்திருக்கிறது, மேலும், மக்கள் பிரச்சினைகளில் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம் போன்றவைகளுக்கு ஊடகங்கள் தகுந்த முக்கியத்துவம் தருவதில்லை என்றார்.