ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"அகதிகள் பிரகடன விதிகளில் இந்தியாவை அழைக்க இடம் இல்லை"

ஆஸ்திரேலியாவுக்கு படகில் சட்டவிரோதமாகப் பயணித்து தஞ்சம் கோர முற்பட்ட 157 இலங்கைத் தமிழ் அகதிகளை கடந்த மாதம் நடுக்கடலில் தடுத்து நிறுத்திய ஆஸ்திரேலிய அரசு, இப்போது, அவர்களை இந்திய அரசு விசாரிக்க உதவ, ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்புக்குள் அனுமதித்திருப்பதாக கூறியிருக்கிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் பேசிய ஆஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசன், இவர்கள் அனைவரும் இந்தியாவின் புதுச்சேரிக்கு அருகில் இருந்து வந்தவர்கள் என்றும், இந்தியாவில் இவர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சினை ஒன்றும் இல்லை என்பதால், இவர்களைப் பொருளாதாரக் குடியேறிகளாகவே கருதவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்தக் கருத்து யூகத்தின் அடைப்படையில் அமைந்தது என்கிறார் ஆஸ்திரேலியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன். அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, இந்த அகதிகளை முறையாக விசாரித்து முடிவெடுக்கவேண்டும் , இந்தியாவை இதில் நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறார் .