ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிந்து போகுமா ஸ்காட்லாந்து ? ( காணொளி)

ஸ்காட்லாந்து, பிரிட்டனிடமிருந்து பிரிந்து போகவேண்டுமா, என்பது குறித்து ஸ்காட்லாந்து மக்களிடையே வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள கருத்தறியும் வாக்கெடுப்பில், வேண்டும் என்ற தரப்புக்கும் வேண்டாம் என்ற தரப்புக்கும் இடையே நிலவிய ஆதரவு இடைவெளி சமீப நாட்களில் குறைந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு, முதன் முதலாக, சுதந்திரம் வேண்டும் என்ற தரப்புக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாகக் காட்டியது.

இதைத்தான் ஆறு மாதங்கள் முன்னரே, பிரிந்து போக வேண்டும் என்ற தரப்பு கூறிவந்தது.

அதாவது முதலில் பின் தங்கியிருந்தாலும், வாக்கெடுப்புக்கான நாள் நெருங்க நெருங்க, தாங்கள் எதிர் தரப்புடன் சம நிலைக்கு வந்து, பின்னர், முந்திவிடுவோம் என்றே அவர்கள் சொல்லிவந்தனர்.

அப்போதெல்லாம் அதை அவர்களின் கனவு என்று நிராகரிப்பது எளிதாக இருந்தது.

ஆனால் அது இப்போது அப்படித் தோன்றவில்லை.

இந்தக் கருத்துக்கணிப்பு வெளிவந்த நிலையில், பிரிட்டிஷ் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் ஸ்காட்லாந்து பிரிந்து போகவேண்டாம் என்று வாக்களித்தால் , அதற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

" அடுத்த சில நாட்களில் ஸ்காட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான செயல் திட்டம் வெளியிடப்படும். அதிக வரி அதிகாரங்கள், செலவு செய்யும் அதிகாரங்கள், நல்வாழ்வுத் திட்ட அதிகாரங்கள் போன்றவை வழங்கப்படும். இவை குறித்த கால அட்டவணை வெளியிடப்படும். கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிந்து போவதற்கு எதிராக முடிவு வந்தால், இவை அமல்படுத்தப்படும்", என்றார் ஆஸ்போர்ன்.

ஒரே ஒரு கருத்துக் கணிப்பை வைத்து மட்டும் எதையும் சொல்வது என்பது சற்று ஆபத்தான விஷயம். ஆனால் மக்கள் மனோநிலையின் போக்கு தெளிவாக இருக்கிறது. இவ்வளவு நாள் வரை பிரிந்து போகவேண்டாம் என்ற தரப்புக்கு இருந்து வந்த சுமார் 14 சதவீத கூடுதல் ஆதரவு என்பது ஒரே மாதத்தில் காணாமல் போய்விட்டது போல் தெரிகிறது.

பிரிட்டன் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற தரப்பை ஆதரிக்கும் கட்சிகள், ஸ்காட்லாந்துக்கு மேலும் அதிகாரங்கள் தரப்படும் என்று உறுதி அளிக்கலாம், ஆனால் வாக்கெடுப்புக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், இது தாமதாக வரும் குறைவான வாக்குறுதி என்று பிரிந்து போகவேண்டும் என்ற தரப்பு கூறுகிறது.

பிரிட்டன் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற தரப்புக்கு இது ஒரு நெருக்கடியான, ஏன் ஆபத்தான தருணம். ஏனென்றால், பிரிந்துபோகவேண்டும் என்ற தரப்பினர், தாங்கள் பல மாதங்களுக்கு முன்னரே வருவோம் என்று நம்பிய ஒரு கட்டத்துக்கு இப்போது வந்திருப்பதாகக் கருதுகிறார்கள்.