"ஆசிரியர் தரம்தான் பிரச்சனை, பற்றாக்குறை பிரச்சனையல்ல"

"ஆசிரியர் தரம்தான் பிரச்சனை, பற்றாக்குறை பிரச்சனையல்ல"

வளர்முக நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ஆசிரியர் பற்றாக்குறை மோசமடையும் என்று யுனெஸ்கோ அறிக்கை கூறினாலும், தமிழ்நாட்டில், ஆசிரியர் எண்ணிக்கை பிரச்சனை அல்ல, தரம்தான் பிரச்சனை என்கிறார் கல்வியாளர் ராஜகோபாலன்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள், சுமார் ஆயிரம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பணியிடங்கள் சில காலியாக இருந்தாலும், ஆட்பற்றாக்குறை என்பது கிடையாது. பிரச்சனை ஆசிரியர்களின் தரம்தான் என்று அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழ் நாட்டில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் தரம் சரியாகத்தான் இருக்கிறது. அதில் சேரும் மாணவர்கள் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்கள் அளவுக்கு பெற்றுத்தான் இடம் பிடிக்கிறார்கள். ஆனால் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்தான் , தரப்பிரச்சினையை எதிர்கொள்கின்றன. அவைகளில் பலவற்றுக்கு சரியான வசதிகள் இல்லை, மாதிரிப்பள்ளிகள் கூட இல்லை என்றார் ராஜகோபாலன்.

தமிழ்நாடு அரசு சுமார் 40 ஆண்டுகள் முன்னர் வரை, கல்விக்காக, 35 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்துவந்தது, ஆனால் அது இப்போது சுமார் 14 விழுக்காடாக குறைந்துவிட்டது. இந்த ஒதுக்கீட்டை சுமார் 20 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்தால் கூட தமிழ்நாட்டில் கல்வியின் தரம் உயரும் என்கிறார் ராஜகோபாலன்.