மனுஷ்யபுத்திரன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை வேண்டும் – மனுஷ்யபுத்திரன்

பாரிஸ் நகரில் நையாண்டி இதழான, " ஷார்லி எப்தோ" அலுவலகத்தில் இருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தாம் கண்டிப்பதாகத் தெரிவித்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், அதே நேரம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நுண்ணுணர்வுகளை புண்படுத்துவதும் தவறு என்றார்.

இஸ்லாமிய நம்பிக்கைகள் குறித்து இஸ்லாத்துக்குள்ளும், வெளியிலிருந்தும் பல விமர்சனங்கள் வருகிறது என்று கூறும் மனுஷ்யபுத்திரன், ஆனால் முகமது நபியை உருவகப்படுத்துவது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்கிறார். முகமது நபியை மிகப் புனிதமாக முஸ்லீம்கள் கருதுவதால் அது குறித்து மற்றவர்கள் பெருந்தன்மையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இது இஸ்லாத்துக்கு எதிரான விடயமாக தான் பார்க்கவில்லை என்று கூறிய மனுஷ்யபுத்திரன், கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது என்பதும் எதிர்வினையாற்றுவதற்கான எல்லை எவ்வளவு என்பதும் தகர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

பண்பாடு சார்ந்த நுண்ணுணர்வுகளை இதழ்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அந்தக் கவலைகளை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டால் அது பழமைவாதிகளுக்கே உதவியாக அமையும் என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.