நேதாஜி கோப்புகள்: " ஆவணங்கள் தேசத்தின் சொத்து, அரசின் சொத்து அல்ல"

இந்திய அரசு , சுதந்திரப்போராட்ட கால தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இறுதி முடிவு குறித்த ஆவணங்களை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதன் பின்னணியில், இது குறித்து ஒரு முடிவெடுக்க உயர்மட்ட குழு ஒன்றை நியமித்திருக்கிறது.

இந்த நிலையில், நேதாஜி ஆவணங்களை இந்தியா வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது, ஒரு சில ஆவணங்களை குறிப்பிட்ட காரணங்களுக்காக ரகசியமாக வைத்திருக்கலாம், ஆனால் பெரும்பாலான ஆவணங்களை ரகசியமாக வைத்திருப்பது வரலாற்றுக்கு செய்யும் துரோகம்" என்கிறார் சமகால வரலாற்றாய்வாளர் பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி.

பொதுவாக சர்வதேச அளவில், அரசுகள் ஆவணங்களை 30 ஆண்டுகள் வரை ரகசியமாக வைத்திருக்கும். பின்னர் அவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம் என்று கூறும் வெங்கடாசலபதி, ஆனால் இந்தியாவில் இது குறித்த ஒரு தெளிவான நடைமுறை இல்லை என்கிறார்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இது போன்ற ஆவணங்களை தேசிய ஆவணக் காப்பகத்துக்கு மாற்ற முயற்சி செய்தது ஆனால் அந்த நடவடிக்கை முழுமை பெறாமலே போனது என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் நேதாஜி விவகாரத்தைப் பொறுத்தவரை, நேதாஜி மறைவு குறித்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்திய அரசுகள் விசாரணைக் கமிஷன்களை நியமிப்பது என்பது ஒரு கேலிக்கூத்தாகவே முடிந்திருக்கிறது என்றும் வெங்கடாசலபதி கூறுகிறார். ஏனென்றால், நேதாஜி பிறந்து 118 ஆண்டுகள் ஆகின்றன. அவர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் முடிந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் இன்னும் அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் அது குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கோருவது வேடிக்கையானது என்று அவர் கூறுகிறார்.