பவளவிழா காணும் பிபிசி தமிழோசை

பிபிசி உலக சேவையின் மூத்த மொழிப்பிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தொடங்கி இன்றோடு (03-05-2015) 74 ஆண்டுகள் முடிந்து, 75வது ஆண்டு தொடங்குகிறது.

பிரிட்டனின் காலனிய ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டம் மற்றும் இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் மொழிப்பிரிவுகளில் ஒன்றான பிபிசி தமிழோசை தனது நீண்ட பயணத்தில் பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் ஒலி சாட்சியாக இருந்திருக்கிறது.

காலவெள்ளத்தில் 75 ஆண்டுகள் என்பது ஒரு துளியாக இருக்கலாம். ஆனால் ஒரு ஒலிபரப்பு நிறுவனத்தின் வாழ்க்கையில் அது ஒரு பெரும் பகுதி.

கடிதமாக கருவாகி செய்தியாக கிளைபரப்பி.....

பிபிசி தமிழோசை தொடங்கப்பட்டது 1941 மே மாதம் 3 ஆம் தேதி என்றாலும் அதற்கு பிபிசி தமிழோசை என்கிற பெயர், அது தொடங்கி சில ஆண்டுகளுக்குப் பின்னரே சூட்டப்பட்டது. இதன் பின்னணியை பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தமிழோசையின் முன்னோடி ஆசிரியர்களில் ஒருவரான சிவபாதசுந்தரம் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.

"பிபிசி தமிழோசை யுத்தகாலத்தில் ஆரம்பித்தபோது இலங்கை கடிதம் என்று ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை எழுதிப் படித்தவர் தம்பு என்பவராவர். அவர் இலங்கைக்காரர். ஆனால் இந்திய சிவில் சர்விஸ் சேவையில் சென்னையில் கலெக்டராக பணியாற்றியவர். அவர் தான் அந்த இலங்கை கடிதத்தை எழுதிப் படித்தவர். இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த பின்னர் 1947ஆம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பை சஞ்சிகை நிகழ்ச்சியாக விரிவுபடுத்தும் நோக்குடன் பிபிசி என்னை (சிவபாதசுந்தரத்தை) அழைத்தது. 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் பிபிசிக்கு வந்தேன். 1948ஆம் ஆண்டு ஒரு முறையான சஞ்சிகை நிகழ்ச்சியாக இதை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஒரு முறையான முகப்பிசையை உருவாக்கி, இலங்கைக் கடிதம் என்று இருந்ததை உலகக் கடிதமாக, உலக நிகழ்ச்சியாக நடத்துவதற்கு ஏற்பாடாகி, 1948 ஆம் ஆண்டு தான் தமிழ் நிகழ்ச்சிக்கு தமிழோசை என்கிற பெயர் ஏற்பாடாயிற்று” என்று தெரிவித்தார் சோ.சிவபாதசுந்தரம்.

பிபிசி தமிழோசையின் துவக்ககால முகப்பிசை மறைந்த இசைக்கலைஞர் டி.பி.ஜெயராமையர் அவர்களால் தயாரிக்கப்பட்டு தமிழோசையில் கே.பி.ரங்காச்சாரி காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டு வரையிலுமே கூட அந்த இசைதான் பிபிசி தமிழோசையின் முகப்பிசையாக இருந்தது.

படக்குறிப்பு,

பிபிசி தமிழின் இணைய முத்திரை/இலச்சினை

ஆரம்ப காலகட்டங்களில் வாரமொருமுறையாகவும் பின்னர் வாரமிரு முறையாகவும் ஒலிபரப்பான பிபிசி தமிழோசை, பின்னர் செய்தி மற்றும் நடப்புச் செய்திகள் என்று பரிணமித்தது.

1980களில் தமிழோசை செய்தி மற்றும் சித்திரங்கள், வானொலி நாடகங்கள் என மலர்ந்த காலம். அதுவே பிபிசி தமிழோசையின் பல மூத்த நேயர்கள் இன்றும் நினைவுகூறும் காலமாகவும் இருந்துவருகிறது.

சங்கரண்ணா என்று பிபிசி தமிழோசை நேயர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசையின் பொறுப்பாளராக இருந்த அந்தக்காலத்தில்தான் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல பிபிசி தமிழோசையில் மொழிப்பெயர்ப்பாகி அரங்கேறின.

தேம்சு நதிக்கரையில் இருந்து சங்கரமூர்த்தியின் கணீர்க்குரலில் ஒலித்த அந்த தமிழோசை சிற்றலை மூலமாகவே ஒலிபரப்பாகி வந்தாலும், பல லட்சக்கணக்கான நேயர்களின் பாசத்துக்குரிய ஓசையாக இருந்து வந்தது.

இலங்கை, இந்தியா, உலகம் என்று விரிந்து......

சஞ்சிகை வடிவ நிகழ்ச்சி என்றாலும், இந்திய இலங்கை அரசியல் பிரமுகர்கள், கலைஉலகப்பிரமுகர்கள் என பலரின் குரல்களும் தமிழோசையில் ஒலித்தன.

இலங்கைப்போர் 1980களின் தொடக்கத்தில் பெரிய அளவில் வெடித்தபோது, பிபிசி தமிழோசையின் கவனம் பெருமளவு இலங்கைப் பிரச்சனையின்மீது திரும்பியது.

இலங்கை இனப்பிரச்சனையின் பல்வேறு அரசியல் பரிமாணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வந்த பிபிசி தமிழோசை பல முறை இலங்கை அரசியலில் முக்கிய பங்காற்றிய தலைவர்கள் பலரையும் பேட்டி எடுத்தது.

தமிழக முன்னாள் முதல்வர்கள் மு கருணாநிதி, எம்.ஜி.ஆர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல தமிழ் அரசியல் தலைவர்களின் பிரத்யேக பேட்டிகள் பிபிசி தமிழோசையில் இடம்பெற்றிருந்தன.

இலங்கை மோதலின் பக்கசார்பற்ற சாட்சியமாய் நீடித்து....

இலங்கைப்போர் 1990களில் உச்சமடைந்து யாழ்ப்பாணத்திலும், பின்னர் வன்னியிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு துல்லியமான, பக்கசார்பற்ற செய்திகளை வழங்கி முக்கிய பங்காற்றியது பிபிசி தமிழோசை.

பின்னர் 2002ஆம் ஆண்டிலிருந்து சில ஆண்டுகள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோது, நாட்டில் ஏற்பட்ட தற்காலிக அமைதியையும், பின்னர் அந்த ஒப்பந்தம் ஏட்டளவில் நின்று மோதல்கள் மீண்டும் வெடித்தபோது, மக்கள் பட்ட துயரங்களையும் தொடர்ந்து பதிவு செய்து வந்தது தமிழோசை.

இலங்கைப்போரின் இறுதிக்கட்டங்களில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப்பகுதிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், போர் முனையில் இருந்த மக்கள் மற்றும் அரச மருத்துவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் குறித்த செய்திகளை உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி புலம்பெயர் தமிழர்களுக்கும் அறியத் தந்தது பிபிசி தமிழோசை.

போர்க்காலத்தில் இலங்கையில் கடும் ஒலிபரப்பு நெருக்கடிக்கு ஆளான தமிழோசை, தனது பண்பலை ஒலிபரப்பை சிறிது காலம் நிறுத்தி வைக்க நேரிட்டது. தற்போது அது இலங்கை நேயர்களுக்கு ஐந்து நிமிட உலகச் செய்தியறிக்கையை ஷக்தி எப்.எம் வானொலி மூலம் வழங்கி வருகிறது.

தொழில்நுட்பத் துணையோடு இணையத்தில் நுழைந்து, தொலைக்காட்சியாய் தொடரும் தமிழோசை......

இலங்கைப் போர் முடிந்த கால கட்டம்தொழில்நுட்பத்திலும் பெரும் மாற்றங்கள் உருவாகி வந்த காலம். இணையத்தில் ஏற்கனவே புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் தடம்பதித்த பிபிசி தமிழோசை, மெல்ல மெல்ல வளர்ந்து, பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களிலும் தனது முத்திரையை பதிக்கத் தொடங்கி அந்த ஊடகங்களிலும் புதிய, இளைய நேயர்களைப் பெற்றிருக்கிறது.

படக்குறிப்பு,

பவளவிழா காணும் பிபிசி தமிழ் தொலைக்காட்சியிலும் செய்திகளை வழங்குகிறது

இதன் இணையதளச் செய்திகள் இப்போது சென்னையிலிருந்து வெளிவரும் ஹிந்து நாளேட்டின் தமிழ்ப் பதிப்பிலும் இடம்பெறுகின்றன.

பிபிசி தமிழோசையின் வரலாற்றில் 2015ஆம் ஆண்டு மற்றும் ஒரு மைல்கல். இதுவரை வானொலி மற்றும் இணையதளம் என்ற இரு ஊடகங்களில் மட்டுமே செயல்பட்டுவந்த பிபிசி தமிழோசை, இப்போது தொலைக்காட்சி மூலமும் புதிய நேயர்களை ஈர்க்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று தொடங்கப்பட்ட பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி, இந்தியாவின் தந்தி தொலைக்காட்சி மூலம் உலகச் செய்திகளை 10 நிமிட நேரம் தமிழக மற்றும் இணையதளம் மூலம் உலக நேயர்களுக்கும் வழங்கி வருகிறது.

பிபிசி தமிழோசை தனது வரலாற்றில் பெரும் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. காலத்தின் போக்குக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும், நேயர்களின் தேவைகளுக்கும் ஏற்ப பிபிசி தமிழோசை தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு மாறி, இந்த அளவு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. நேயர்களின் ஆதரவோடு பிபிசி தமிழோசை மென்மேலும் வளர்ந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது செய்திச்சேவையைத் தொடரும்.