ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அர்ச்சகர் வழக்கு: "சமூக நீதிக்கெதிரான தீர்ப்பு"- துரை முருகன்

ஆகம விதிகளில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் தமிழகக் கோயில்களில் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் 2006ம் ஆண்டு சட்டத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று, புதன்கிழமை, அளித்திருக்கும் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிர்ப்பான ஒன்றாகவே திமுக கருதுகிறது என்று முன்னாள் சட்ட அமைச்சர் துரை முருகன் கூறியிருக்கிறார்.

இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட துரை முருகன், அர்ச்சகராக யார் வேண்டுமானாலும் ஆகலாம் என்று திமுக அரசு கொண்டுவந்த சட்டம் கூறவில்லை, ஆகம விதிகளைப் பயின்றவர்கள் எந்த சாதியில் இருந்தாலும், அர்ச்சகராகலாம் என்பதுதான் திமுகவின் சீர்திருத்தக் கொள்கை என்று கூறினார்.

நீதிமன்றத்தீர்ப்பு இன்னும் தெளிவாகவில்லை என்று குறிப்பிட்ட துரைமுருகன், எது எப்படியிருந்தாலும், இத்தீர்ப்பை சமூக நோக்குக்கு கொஞ்சம் பின்னடைவாகத்தான் திமுக கருதுகிறது, முற்போக்கு எண்ணம் கொண்டவர்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சிதான் என்றார்.

தமிழக அரசு இந்த வழக்கை கையாண்ட விதம் திமுகவுக்கு திருப்தியளிக்கிறதா என்று கேட்டதற்கு, பொதுவாகவே தமிழக அரசு இந்த சட்டம் தோல்வியடைந்தால் பரவாயில்லை என்று உள்ளூர மகிழ்ச்சி அடைவார்கள் என்பது தனக்குத் தெரியும் என்றார்.

இது குறித்து திமுக சட்டரீதியாக வேறு மேல் நடவடிக்கைகளை எடுக்குமா என்று கேட்டதற்கு பதிலளித்த துரைமுருகன், அது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் என்றார்.