ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நீர்நிலைகளைக் காக்க நீர் விளையாட்டுகள்: சமூக ஆர்வலர்களின் புதிய உத்தி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், ஆக்ரமிப்புகள் மற்றும் பிற சட்ட விரோதச் செயல்கள் காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக பல சுற்றுச்சூழல் அமைப்புகள் கூறும் நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள மற்ற நீர் நிலைகளை பாதுகாக்க சில சமுக ஆர்வலர்கள் புதிய உத்திகளைக் கையாண்டுவருகின்றனர்.

சென்னை போன்ற நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் மக்களின் நேரடி பயன்பாட்டில் இல்லை என்றும், கண்காணிப்பு இல்லாத இப்பகுதிகளில் சட்ட விரோதமாக மண் திருட்டு, நீர் திருட்டு போன்ற இயற்கை அழிவுகள் நடைபெறுவதாக சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளில் மக்களின் நடமாட்டத்தை அதிகப்படுத்துவதன் மூலமாக, அவற்றை தீவிர கண்காணிப்பில் வைக்க முடியும் என்பதே அவர்களது நம்பிக்கை.

இந்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் சமுக ஆர்வலர்களில் ஒருவரான புவியல் வல்லுநர் குமரன் என்பவர், பொது மக்களுக்கு நீர் விளையாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

நீர்நிலைகளை மாசுப்படுத்தாத விளையாட்டுக்களை மட்டுமே தேர்வு செய்து பயிற்சி அளித்து வருவதாக பிபிசி தமிழோசையிடம் குமரன் கூறினார்.

இயற்கையை சீரழிக்காத இது போன்ற விளையாட்டுக்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதன் மூலமாக, மீதமுள்ள நீர்நிலைகளை சமுக விரோத கும்பல்களிடமிருந்து காப்பாற்ற முடியும் என்பதே அவரது நம்பிக்கை.

மேலும் இது போன்ற நடவடிக்கைகள், நீர்நிலைகளை பாதுக்காக்க அரசாங்கம் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் குமரன் குறிப்பிடுகிறார்.